சுவிஸ் தூதரக பணியாளர் சிஐடியிடம் 5 மணிநேரம் சாட்சியம்!

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் (சி.ஐ.டி) முன்னிலையாகி சம்பவம் குறித்து சாட்சியம் அளித்துள்ளார்.

சுவிஸ் தூதரக இலச்சினையுடனான வாகனத்தில் மேற்படி பெண் பணியாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். அந்த வாகனத்தில், சில தூதரக அதிகாரிகளும் சட்டத்தரணிகளும் வருகை தந்தனர். அச்சுறுத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் முகத்தை மூடியவாறு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பந்தப்பட்ட பெண் பணியாளர் 5 மணிநேரம் சாட்சியமளித்ததை அடுத்து, மருத்துவ அறிக்கையை பெறுவதற்காக கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

சி.ஐ.டி யினரிடம் அறிக்கை வழங்காமல் டிசம்பர் 9 ஆம் திகதி வரை சம்பந்தப்பட்ட பெண் பணியாளர் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று கொழும்பு பிரதான நீதவான் தடை உத்தரவொன்றை ஏற்கனவே பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!