கொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு – மைத்திரிக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை

மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்த முன்னாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா உச்சநீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கொழும்பு றோயல் பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில், 18 வயது நிரம்பாத யொன்னா ஜோன்சன் என்ற இளம் பெண்ணை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில், ஜூட் அன்ரனி ஜயமகா என்ற குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் இருந்த ஜூட் அன்ரனி ஜயமகாவுக்கு சிறிலங்கா அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தில் இறுதியில் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.

கடந்தமாதம் 10ஆம் நாள் குருவிட்ட சிறையில் இருந்து ஜூட் அன்ரனி விடுவிக்கப்பட்டார்.

அவரது விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரரைணக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு, எதிர்வரும் 2020 மே 29ஆம் நாள், நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, விடுவிக்கப்பட்ட கொலைக் குற்றவாளியை நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ள போதும், அவர் அதற்கு முன்னதாகவே நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டார் என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 10ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி ஜூட் அன்ரனி 13ஆம் நாள் கடவுச்சீட்டுப் பெற்றுக் கொண்டு, அதிபர் தேர்தலுக்கு முதல் நாள், நொவம்பர் 15ஆம் நாளே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!