எம்சிசி கொடை உடன்பாடு – கையெழுத்திடத் தயாராகும் சிறிலங்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் கொடை உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐதேக அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் கொடையை பெறுவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பொதுஜன பெரமுனவும் அதன் பங்காளிக் கட்சிகளும், எம்சிசி உடன்பாடு நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதில் கையெழுத்திடக் கூடாது என்று கடுமையான பரப்புரைகளை மேற்கொண்டன.

அதிபர் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த தீவிரமான பரப்புரை ஐதேகவுக்கு கடும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியிருந்தது.

கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும், எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடப் போவதில்லை என்றே கூறியிருந்தது.

ஆனால், தற்போது. அரசாங்கம் எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு தயாராகி வருவதாக ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், எம்சிசி உடன்பாட்டில் 70 வீதம் நல்லது என்று கூறியிருக்கிறார்கள். அடுத்து அவர்கள் உடன்பாட்டின் 90 வீதம் நல்லதே என்று கூறக் கூடும்.

எம்சிசி உடன்பாட்டில் தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டால் கூட ஆச்சரியமில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்சிசி கொடையின் 70 வீதம் போக்குவரத்து துறை அபிவிருத்திக்கே பயன்படுத்தப்படவுள்ளது, இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று, அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!