குணப்படுத்த முடியாத நோயுடன் போராடும் கனடிய பெண்: கருணைக் கொலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை!

கனடா ஒன்ராறியோவைச் சேர்ந்த 27 வயதான ஜஸ்டின் நோயல் என்ற பெண் குணப்படுத்த முடியாத நோயுடன் போராடி வருவதன் காரணமாக கருணைக் கொலையை மேற்கொள்ள உதவுமாறு கனடா மத்திய அரசைக் கோரியுள்ளார். தன்னைப் போல குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் சட்டரீதியான கருணைக் கொலைச் சட்டம் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருணைக் கொலை சட்டத்தில் இருக்கும் கடினமான சரத்துக்களில் திருத்தம் கொண்டு வர கனடா மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போது, இதற்கான வாக்குறுதிகளை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வழங்கியிருந்தார். எதிர்வரும் மார்ச் மாதயிறுதியில் இந்தத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கருணைக் கொலை சட்டத்தில் உள்ள கடினமான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என ஜஸ்டின் நோயல் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம், தனது வாழ்க்கையை சட்டப்பூர்வமாக முடித்துக்கொள்ள சாத்தியம் உள்ளதாக என அவர் தெரிவித்துள்ளார். ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயுடன் குறித்த பெண் போராடி வருகின்றார். ஃபைப்ரோமியால்ஜியா என்பது சோர்வு, தூக்கம், ஞாபக மறதி, மனநலப் பாதிப்பு என்பவற்றுடன் பரவலான தசைக்கூட்டு வலியை ஏற்படுத்தும் ஒருவகை நோயாகும்.

மூளை வலி சமிக்ஞைகளை தூண்டுவதன் மூலம் ஃபைப்ரோமியால்ஜியா உடல் வலி உணர்ச்சிகளை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எழுந்து நிற்கக் கூடிய சந்தர்ப்பத்தில் கூட கடுமையாக ஏற்படும் உடல் வலியைத் தாங்க முடியாது என நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் நோயல் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!