சகோதரிகள் இருவரையும் காதல் வலைவிரித்து கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைத்த வாலிபர் கொடூர கொலை!

கொடைக்கானல் அருகே அக்காளுடன் சேர்த்து தங்கைக்கும் காதல் வலைவிரித்து கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைத்த ரோமியோ ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு 600 அடி பள்ளத்தில் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. கார் எரிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு சென்ற போலீசாரிடம் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட உத்தம வில்லன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறையைச் சேர்ந்த விவசாயி திருப்பதி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென மாயமானார். அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் வெள்ளப்பாறையைச் சேர்ந்த முருகன் என்பவரது கார், தீ வைத்து கொளுத்தப்பட்டது. அது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் முருகனின் தம்பி மணிகண்டனைப் பிடித்து போலீசார் விசாரிக்க முயன்றனர். கார் கொளுத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரிக்க வந்தது தெரியாமல், மாயமான விவசாயி திருப்பதியை கொலை செய்தது குறித்து உண்மையை கக்கினான் மணிகண்டன். இதனால் திருப்பதி குறித்த வழக்கில் 5 மாதம் கழித்து துப்பு துலங்கியது.

கொலையான திருப்பதிக்கும் கூம்பூர் வயலை சேர்ந்த ஜான்சிராணிக்கும் தவறான உறவு இருந்துள்ளது. அதேநேரம் ஜான்சிராணியின் தங்கையான சாந்திக்கு மணிகண்டனுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்காள் ஜான்சிராணியோடு தங்கை சாந்தியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பிய ரோமியோ திருப்பதிக்கு சாந்தி மணிகண்டனுடன் பழகுவது பிடிக்கவில்லை.

இதனால் மணிகண்டனையும் சாந்தியையும் அவர் கண்டித்ததாக கூறப்படுகின்றது. ஆத்திரம் அடைந்த சாந்தி விவரத்தை தனது சகோதரி ஜான்சிராணியிடம் தெரிவிக்க, ஏற்கனவே திருப்பதியால் தனது வாழ்க்கை தடம் மாறிச்சென்று விட்ட நிலையில் தற்போது தனது தங்கையின் வாழக்கையும் சீரழிக்க திட்டமிடும் திருப்பதியை தீர்த்துகட்ட திட்டம் வகுத்துள்ளார் ஜான்சிராணி.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ஜான்சிராணியின் வீட்டுக்கு வந்த திருப்பதியை சாந்தியின் காதலன் மணிகண்டன், அவனது நண்பர்களான நாகராஜ், சரத்குமார், விஷ்ணு ஆகியோர் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்துக்கு ஜான்சிராணி, சாந்தி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர். இதையடுத்து மணிகண்டன், ஜான்சிராணி, சாந்தி, நாகராஜ், சரத்குமார் ஆகிய 5 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் விஷ்ணுவை தேடி வருகின்றனர். “தவளை தன் வாயாற் கெடும்” என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில், கார் எரிப்பு குறித்து விசாரிக்க சென்ற போலீசாரிடம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான் மணிகண்டன் என்கின்றனர் காவல்துறையினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!