சுதந்திர கட்சி – பொதுஜன முன்னணி பொது சின்னத்தில் பொதுத் தேர்தலை கையாள வேண்டும் : தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து பொது சின்னத்தில் பொதுத் தேர்தலை கையாள வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி இதற்கு இணக்கம் தெரிவித்தே ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைத்தார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர.

அத்தோடு தாம் ஜனாதிபதியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அவர் மீறமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எவ்வாறான நகர்வுகளை கையாளப்போகின்றது என்ற காரணிகளை தெளிவுபடுத்தும் வகையில் அவர் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான வகையில் போட்டியிடப்போகின்றது என்பது குறித்து இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ளது.

தொடர்ச்சியாக நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடவேண்டியுள்ளது. விரைவில் இது குறித்து நாம் நடவடிக்கை எடுப்போம். எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பொது உண்டபடிக்கை ஒன்றினை செய்துகொண்டது.

இதில் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுவதுடன் பொதுத் தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கான உடன்படிக்கைகளில் இரு தரப்பும் கைச்சாத்திட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவே இதில் கைச்சாத்திட்டுள்ளார்.

ஆகவே ஜனாதிபதி உடன்படிக்கைக்கு அமைய செயற்படுவார் என நம்புகின்றோம்.

இது வெளியில் பேச வேண்டிய காரணிகள் அல்ல. கட்சியின் உயர் மட்டமாக முன்னெடுக்க வேண்டிய தீர்மானமாகும். ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் கூட்டணியின் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் நாம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து தீர்மானம் எடுப்போம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!