அடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பு,(சின்ஹூவா) கடலிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் 269 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பிரம்மாண்டமான கொழும்புத் துறைமுக நகரம் (Colombo Port City) டிசம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை அந்த நிலப்பரப்பு தலைநகர் கொழும்புடன் ஒன்றிணைக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடியது.

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கொண்டாட்டத்தின் போது நினைவுமுத்திரையும், முதல்நாள் உறையும் வெளியிடப்பட்டதுடன் துறைமுக நகரத்திட்டப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் கூடியிருந்த பெருந்தொகையான மக்களைப் பரவசப்படுத்தும் வகையில் கண்ணைக் கவரும் வானவேடிக்கைகளும் இடம்பெற்றன.

31 வயதான கணக்காய்வு உதவியாளரான ரஸ்மின் ஷஹாரி உள்நாட்டவர்களால் ‘கொழும்பு போர்ட் சிட்டி” என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற சீன துறைமுக பொறியியல் கம்பனி துறைமுகநகர் கொழும்பு பிரைவேட் லிமிடெட் (CHEC Port City Colombo (Pvt) (Ltd) நிறுவனத்தில் 2014 ஆம் ஆண்டு ஒரு வரவேற்பாளராக இணைந்துகொண்டார். அந்த நிறுவனமே துறைமுக நகரை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது. சீனாவினதும், இலங்கையினதும் தலைவர்கள் துறைமுக நகரத்திற்கான அடிக்கல் நாட்டி, நாடாவையும் வெட்டி திட்டத்தை ஆரம்பித்துவைத்த தினத்தைத் தன்னால் ஒருபோதும் மறக்கமுடியவில்லை என்று மிகுந்த பெருமிதத்துடன் கூறினார்.

அன்றைய தினத்திலேயே துறைமுக நகர வரலாற்றில் முதற்தடவையாக மண் அகழ்வு இயந்திரங்கள் கடற்படுக்கையிலிருந்து மணலை எடுத்து மேற்பரப்பில் விசிறின. துறைமுக நகரத்திற்கென ஒதுக்கப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் உருவாக்கும் வரை கடலிலிருந்து மணலை அகழ்ந்து கொண்டுவந்து கொட்டும் பணிகளை அந்த இயந்திரங்கள் 24 மணிநேரமும் செய்தன. இந்த நிலப்பரப்பில் அமையவிருக்கின்ற சிறப்புவாய்ந்த கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் நிதி மற்றும் வாணிப மையமாக சகல வசதிகளுடனும் விளங்கப்போகின்றது.

ஏனைய உள்ளுர் பணியாளர்களைப் போலவே ரஸ்மின் ஷஹாரியும் அன்றைய தினம் முதல் புராதன கொழும்புத் துறைமுகம் எதிர்காலத்திற்கான ஒரு நகராக மாறுகின்ற கனவு நனவாவதைக் காணத்தொடங்கினார். “இலங்கைக்குப் புதியதொரு நிலப்பரப்பை எமது சொந்தக் கைகளாலேயே உருவாக்கி நாம் சேர்த்திருக்கிறோம் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயமாகத் தெரிகிறது” என்று பரவசத்துடன், கண்களை அகலத் திறந்தவாறு ரஸ்மின் கூறினார்.

அரேபியக் கடலோரமாக நீண்டு அமைந்திருக்கும் புகழ்பெற்ற காலிமுகத்திடலுக்கு அருகாக இந்தத் துறைமுக நகரத்திட்டம் அமைந்திருக்கிறது. இதமான கடல் காற்றை அனுபவிக்க காலிமுகத்திடலில் புற்தரையிலும், நீண்ட இருக்கைகளிலும் அமர்கின்ற உள்ளுர்வாசிகள் தங்களுக்கு முன்னாள் உருவாகிக்கொண்டிருக்கும் துறைமுக நகரைப் பார்த்துப் பரவசமடைகிறார்கள். வாகனங்கள் வருவதும், போவதுமான இருப்பதையும் கடலடியில் இருந்து மணலை அகழும் இயந்திரங்கள் இடைவிடாது 24 மணிநேரமும் செயற்பட்டுக் கொண்டிருந்ததையும் அவர்கள் கண்டார்கள். உண்மையிலேயே அது ஓய்வின்றிய ஒரு சுறுசுறுப்பான செயற்பாடாகவே அமைந்திருந்தது.

2019 ஜனவரி 16 ஆம் திகதி மூன்று தடவை நீண்ட விசில் சத்தத்துடன் கடற்படுக்கையிலிருந்து மணலை அள்ளும் பணிகளை பிரம்மாண்டமான இயந்திரங்கள் கடைசித்தடவையாகச் செய்து முடித்தன. கடலிலிருந்து நிலப்பரப்பை மீட்டெடுக்கும் பணி அத்துடன் நிறைவிற்கு வந்தது. சீன துறைமுக பொறியியல் கம்பனி போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் ஜியாங் ஹெளலியாங் கொழும்பு துறைமுக நகரத்திற்குத் தேவையான 269 ஹெக்டேயர் நிலப்பரப்பும் கடலிலிருந்து முழுமையாக மீட்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார்.

“இலங்கையின் வரலாற்றிலேயே கொழும்புத் துறைமுக நகரமே மிகவும் பிரம்மாண்டமானதும், வனப்பு மிக்கதுமான அபிவிருத்தித் திட்டம்” என்று அன்றைய பாரிய நகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக கூறினார்.

கடலிலிருந்து நிலப்பரப்பை மீட்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருந்த பணிகளை மிகவும் துறைசார் நிபுணத்துவப் பாங்கிலானவையும், தேர்ச்சி மிக்கவையும் என்று கடல்சார் பொறியியலாளர் சில்வா குறிப்பிட்டார்.

இலங்கையில் “பொறியியலாளர்களின் தொட்டில்” என்று அறியப்பட்ட மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர் சில்வா முன்னர் பல வருடங்களாக பொறியியல்துறை ஆலோசகராகப் பணியாற்றிய அவர் துறைமுக நகரத்திற்கு அண்மையாக செயற்பட்ட ஒரு கம்பனியில் அலைதாங்கி அணை தரக்கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாக இருந்தார். அவர் 2014 டிசம்பரில் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் இணைந்துகொண்டார்.

“துறைமுக நகருக்கு அண்மையாக நானொரு கடல்சார் பொறியியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தது தற்செயல் நிகழ்வுப்போக்காகப் போய்விட்டது. அதனால் இங்குள்ள கடல்சார் பொறியியல் பிரச்சினைகளுடன் நான் மிகவும் பரீட்சையமானவனாக இருக்கிறேன். அந்த அனுபவம் துறைமுக நகரத்தில் எனது பணிகளை மிகவும் சுலபமாக்கியிருக்கின்றன” என்று சில்வா கூறினார்.

துறைமுக நகரத்திட்டத்தில் ஒரு இலத்திரன் இயந்திரவியல் பொறியியலாளராகப் பணியாற்றும் சஞ்சீவ அல்விஸ் சீனாவில் 6 வருடங்களாகக் கல்விகற்று சின்குவா பல்கலைக்கழகத்தில் மின்சாரப் பொறியியல் மற்றும் தன்னியக்கத்துறையில் சிறப்பு நிலைப்பட்டத்தைப் பெற்று வெளியேறினார். இலங்கையில் தொழில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அல்விஸ் நீண்டகாலம் இலங்கைக்கு வெளியே பல கம்பனிகளுக்காகப் பணியாற்றிவிட்டு நாடு திரும்பினார்.

“நான் எப்பொழுதும் இலங்கையில் பணியாற்றவே விரும்பியிருந்தேன். இப்போது இறுதியாக சீனாவில் நான் படித்தவற்றை எனது சொந்த நாட்டுக்காகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையிலான பிரம்மாண்டமான ஒரு திட்டமாக துறைமுக நகரம் உள்ளதால் நான் மிகுந்த பெருமையடைகிறேன்” என்று அல்விஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

“இதுவரையில் நாம் செய்திருப்பவை எல்லாம் எதிர்கால இலங்கையர்களுக்கான உதாரணங்களாக விளங்கும். துறைமுக நகர அபிவிருத்தி நாட்டிற்கும், மக்களுக்கும், எமது எதிர்கால தலைமுறையினருக்கும் பெரும் பயன்தரும்” என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

37 வயதான துலானி பலிகவதன புதியதொரு நிலப்பரப்பை உருவாக்குகின்ற வாய்ப்பினால் கவரப்பட்டு 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்று செயலாளராகவும், ஆவணக் கட்டுப்பாட்டாளராகவும் கொழும்புத் துறைமுக நகரை நிர்மாணிக்கும் கம்பனியில் இணைந்துகொண்டார். “கொழும்பு துறைமுக நகரத்திட்டம் பற்றி அறிவிக்கப்பட்ட தினமே புதிய நிலப்பரப்பை உருவாக்குவதற்கு நான் அதில் இணைந்துகொண்டேன். அது நம்ப முடியாததும், பிரமிப்பைத் தருவதுமாகும்” என்று துலானி குறிப்பிட்டார்.

சீன துறைமுக பொறியியல் கம்பனி துறைமுகநகர் கொழும்பு பிரைவேட் லிமிடெட் கம்பனியில் வர்த்தக மற்றும் சட்டப்பிரிவின் தலைமை அதிகாரியாக இருக்கும் ஓவ் யொங் 2010 ஆம் ஆண்டில் துறைமுக நகரத்திட்டம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அத்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்தார். இப்பெர்ழுது அவர் புதிதாக உருவாக்கப்பட்ட நிலப்பரப்பில் மகிழ்ச்சியாக உலாவி, துறைமுக நகரத்தின் மூல முன்மாதிரியை பார்த்து வியக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

தலைநகர் கொழும்பின் முதன்முதலான 1.6 கிலோமீற்றர் நீளமான செயற்கைத் தங்கக் கடற்கரை இவ்வருடம் ஏப்ரல் முற்பகுதியில் திறக்கப்பட்டது. எதிர்காலத்தில் கொழும்பு துறைமுக நகரில் கவர்ச்சியான நீர்விளையாட்டுப் பகுதியாக வரவிருக்கும் படகுச் சவாரிப் பகுதியை உருவாக்கும் பணிகள் அதன் இறுதிக்கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கின்றன. துறைமுக நகரின் மத்திய பூங்கா பகுதியில் நாட்டப்பட்டிருக்கும் 400 இற்கும் அதிகமான மரங்கள் புதிய நகருக்குப் பசுமை அழகைக் கொண்டு வந்திருக்கின்றன.

ஒவ்வொரு உள்ளுர் பணியாளரும் எதிர்கால துறைமுகநகர் பற்றி அழகானதொரு காட்சியைக் கொண்டிருக்கிறார் போல் தெரிகிறது. துறைமுக நகரத்தின் எதிர்காலம் தொடர்பில் சுலோகங்களை எழுதும் போட்டியொன்று செயற்திட்டத் திணைக்களத்தினால் அண்மையில் நடத்தப்பட்டது. அதில் பங்குபற்றிய பணியாளர்கள் துறைமுக நகரின் எதிர்கால அபிவிருத்தி பற்றி தங்களது உணர்வுகளைப் பிரமிப்புடன் வெளிப்படுத்தினார்கள்.

அந்தச் சுலோகங்கள் சமகாலம் தொடர்பிலும் எதிர்காலத்திற்கான நம்பிக்கை தொடர்பிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில் ஒரே விதமானவையாக அமைந்திருந்தன. அவற்றில் சில சுலோகங்கள் வருமாறு: “ஒரு கனவுத் துறைமுகமும், எதிர்காலத்திற்கான ஒரு நகரமும்” , “அடுத்த தலைமுறைக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் ஒரு நகரம்” , “ஒரு அபிவிருத்தியடைந்த, அழகான, சுற்றாடலுக்கு நேயமான நகரம்”.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!