சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்கு தடை

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்குப் பதிலாக கண்ணாடிக் குவளைளகளில் குடிநீர் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடக்கும் கலந்துரையாடல்கள், கூட்டங்களின் போது, குடிநீர் போத்தல் வழங்கப்படும் வழக்கம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் இது தொடராது, அதற்கு பதிலாக கண்ணாடிக் குவளைகளில் குடிநீர் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது பெரும்பாலும் சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களின் எண்ணிக்கையை குறைக்கும்.

ஏனைய அரச நிறுவனங்களும் இந்த உதாரணத்தை தங்களால் முடிந்தவரை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”. என்று அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

எனினும், அவர் நடத்திய கூட்டங்களில், பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் படத்துடன் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!