சிறிலங்காவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

அடுத்து வரும் விடுமுறைக் காலத்தில் சிறிலங்காவில் ‘தீவிரவாதிகள் சிறியளவிலான அல்லது எச்சரிக்கை இல்லாத தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று . கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

தனது குடிமக்களுக்கு நேற்று வெளியிட்ட பயண ஆலோசனையிலேயே அமெரிக்கத் தூதரகம் இவ்வாறு கூறியுள்ளது.

“வரவிருக்கும் விடுமுறைக் காலத்தில், அமெரிக்க தூதரகம், அமெரிக்க குடிமக்களுக்கு தற்போதைய பயண ஆலோசனை நிலை 2 ஐ நினைவூட்டுகிறது.

சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரச கட்டடங்கள், விடுதிகள், களியாட்ட விடுதிகள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொதுப் பகுதிகளை இலக்கு வைத்து தீரவாதிகள் சிறிய அல்லது எச்சரிக்கையில்லாத தாக்குதல்களை நடத்தக் கூடும்.

அமெரிக்க குடிமக்கள் சுற்றுலாத் தலங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களுக்குச் செல்லும் போது உங்கள் சுற்றுப் புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்கவும்.

புதிய தகவல்களை பெறுவதற்கும் அவசரகாலத்தில் உங்களைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குவதற்கும், ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் (STEP ) இணைந்து கொள்ளவும்.

முகநூல் மற்றும் கீச்சகத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை பின் தொடரவும்,

சிறிலங்கா தொடர்பான குற்ற மற்றும் பாதுகாப்பு அறிக்கையை மதிப்பாய்வு செய்யவும்.” என்று அந்த பயண எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!