அரசியல் பழிவாங்கல் ஆரம்பம் – அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள்

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட சம்பவம், புதிய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தக் கைது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ள ஐதேகவின் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன போன்றவர்கள், புதிய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதிபரானாலும், சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக் கொள்ள முடியாது என்பதை இந்தளவு விரைவாக கோத்தாபய ராஜபக்ச நிரூபிப்பார் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று கீச்சகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர, ‘அனுதாபம்- சட்டத்தின் ஆட்சியின் மறுபிறப்பு 2015 ஜனவரி 08, மூச்சுத் திறண வைத்துக் கொலை, 2019 டிசெம்பர் 18” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியாளரின் பழிவாங்கும் அரசியல் அதன் பாணியில் தொடங்கியது என்று ஹர்ஷ டி சில்வா பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதேவேளை ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய கீச்சகப் பதிவு ஒன்றில், சிங்கப்பூரின் மோசமான வகையினலான ஒரு காவல்துறை அரசை நோக்கிய முதல் படியை சிறிலங்கா எடுத்துள்ளதாகவும், வரவிருக்கும் நாட்களில் குறைந்தபட்சம் ஒரு முன்னாள் அமைச்சராவது கைது செய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!