“அரசியல் ஞானமற்றவர்களே 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றனர்”

அரசியல் ஞானமற்றவர்களே 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றனர். அரசியல்வாதிகள் அரசியல் சுயநலனுக்காக செயற்படுவதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துநெத்தி தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்த 20 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்த விடயம் என்பதினால் 20 ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை முழுமையாக அறியாமலே எதிர்க்கின்றனர்.

20 ஆவது திருத்தம் மக்களின் ஜனநாயக உரிமைக்கு தடையாக அமையும் என்று அரசியல் அறிவு அற்றவர்கள் குறிப்பிடுகின்றனர். இத்திருத்தத்தினை விமர்சிக்க முன்னர் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக அறிய வேண்டும். நாட்டு தலைவர் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி தேர்தல் முறைமை இத்திருத்தத்தினூடாக இரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மக்களின் நன்மைக்கே.

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலின் ஊடாகவே ஜனாதிபதி மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றனர். மறு முனையில் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களாலேயே தெரிவு செய்யப்படுகின்றனர். ஆகவே இவர்கள் இணைந்தே நாட்டு நிர்வாகத்தினை முன்னெடுத்து செல்கின்றனர்.

எனவே இங்கு ஒருமித்த அரசியலை கொண்டு செல்வதற்கு இரண்டு வேறுப்பட்ட தேர்தல்களை நடத்துவது அவசியமற்றதாகவே காணப்படுகின்றது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடனே பிரதமரும் ஜனாதிபதியும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றே 20 ஆவது திருத்தத்தின் மூலம் நம் குறிப்பிட்டுள்ளோம்.

தற்போதைய அரசியலமைப்பின் 30 ஆவது உறுப்புரையின் (2) ஆம் பந்தியில் மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி என்ற சொற்பதத்தினை நீக்கி விட்டு அதற்கு பதிலாக 30 ஆம் அத்தியாயத்தில் (03) ஆம் பந்தியில் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் மக்களினால் பிரதமர் தெரிவு செய்யப்படுகின்றார். அதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினூடாக ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதற்கான வழிமுறைகளை மையப்படுத்தியே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் ஜனநாயக உரிமைகளளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!