சம்பிக்க கைது – அரசியல் பழிவாங்கல் அல்ல

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதில், எந்த அரசியலும் இல்லை என்றும், காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே, அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், எடுக்கப்படுவதாகவும், சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“முந்தைய நல்லாட்சி அரசாங்கம் பெரும்பாலும் எல்லா அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலரை, அரசியல் பழிவாங்கும் நோக்கில் துன்புறுத்தியது.

ஆனால் ராஜபக்ச அரசாங்கம் ஒருபோதும் அந்த மாதிரியான தந்திரங்களை கையாளாது.

முன்னாள் அமைச்சர் ரணவக்கவைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பது முற்றிலும் சட்டபூர்வமான செயற்பாடாகும்.

எனது தொகுதியில் ஒரு இளைஞன் 2016 இல் அமைச்சர் ரணவக்க சம்பந்தப்பட்ட வீதி விபத்தில் பலத்த காயமடைந்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு அப்போது நீதி வழங்கப்படவில்லை என்றாலும், காவல்துறை அதிகாரிகள் அதை இப்போது சரி செய்ய முயற்சிக்கின்றனர்.

விபத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மிகவும் பயந்து விட்டார்கள், அதனால் தங்களைப் பார்க்க வேண்டாம் என்று குடும்பத்தினர் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!