ஜெர்மனியில் வேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற முதியவர்!

ஜெர்மனியின் மோனோசென்க்ளாட்பாக் நகரைச் சேர்ந்தவர் எபெர்ஹார்டு (வயது 62). முன்னாள் கணினி அறிவியலாளரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார். அதன் பின்னர் தனது சேமிப்பில் இருந்த பணத்தை ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா சென்று செலவழித்துள்ளார். கையில் இருந்த பணம் தீரவே என்ன செய்வதென்று தெரியாமல் தனது காரிலேயே வசித்து வந்துள்ளார். இதற்கிடையே அவரது ஓட்டுநர் உரிமமும் காலாவதியானது. அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் லோயர் சாக்சனி மாநிலத்தின் ஓல்டன்பெர்க் நகரில் சைக்கிள்கள் செல்லும் பாதையில் காரை ஓட்டிச் சென்று, ஏதிரே சைக்கிளில் வந்தவர்மீது வேகமாக மோதினார். இதில் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து எபெர்ஹார்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், ஓல்டன்பெர்க் மாவட்ட நீதிமன்றம் எபெர்ஹார்டிற்கு ஆயுள் தண்டனை வழங்கி நேற்று உத்தரவிட்டது. ‘வேலை மற்றும் தங்குவதற்கு வீடு இல்லாமல் எபெர்ஹார்டு துயரத்தில் இருந்துள்ளார். சிறை சென்றால் அங்கு உணவு, உடை போன்றவை கிடைக்கும் என நினைத்துள்ளார். அதனால் ஏதேனும் குற்றம் செய்ய வேண்டும் என எண்ணி சைக்கிள்கள் செல்லும் பாதையில் காரை ஓட்டிச் சென்று எதிரே வந்தவர் மீது மோதியுள்ளார்’, என நீதிபதிகள் தெரிவித்தனர். பொதுவாக இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தால் மட்டுமே ஆயுள் தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!