ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக இளைஞர் கடத்திக் கொலை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டதோடு, இளைஞரை கடத்திச்சென்று அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கந்துவட்டி கும்பலின் அட்டூழியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர் மறைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. பெயிண்டிங் வேலையை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்த சாகுல் அமீது ஆழ்வார்திருநகரியில் வட்டித் தொழில் செய்யும் கண்ணன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. பெயிண்டிங் ஒப்பந்தம் எடுத்த இடத்தில் இருந்து வர வேண்டிய பணம் வராத நிலையில் பணத்துக்கு வட்டிக்கட்ட இயலாமல் சாகுல் அமீது தவித்துள்ளார். பலமுறை கேட்டும் வட்டிப்பணம் வராததால் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது ஆதரவாளர்கள் 6பேருடன் சேர்ந்து சாகுல் ஹமீதை கடந்த 17ம் தேதி காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அடைத்து வைத்து வட்டிக்கு வட்டிபோட்டு 3 மடங்கு பணம் கேட்டு கடுமையாக தாக்கியதில் சாகுல் அமீது பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து காயங்களுடன் அவரை வீட்டில் கொண்டு வந்து விட்ட கண்ணன் தலைமையிலான கும்பல் அவரை மிரட்டி வெற்றுப் பத்திரத்தில் விரல் ரேகை வாங்கிக் கொண்டு சென்றது.

பலத்த காயத்தால் அவதிப்பட்ட சாகுல் அமீது சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், கந்துவட்டி கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் கண்ணன் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர். கந்து வட்டிக் கும்பலின் தலைவனான கண்ணனை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கந்துவட்டிக் கொடுமையில் ஈடுபட்டு கொடூரக் கொலையில் ஈடுபட்ட கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, கிராமப்புறங்களில் ஏழை எளியோரின் வருமானத்தை சுரண்டும் வட்டிக் கொள்ளையர்களிடம் இருந்து மக்களை காக்க காவல்துறையினர் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!