15 வருடங்களாக பாதுகாக்கப்படும் 300 பேரின் உடற்பாகங்கள்!

சுனாமி பேரலையின் போது உயிரிழந்தவர்களில், அடையாளம் காணப்படாத 300 பேரின் உடற்பாகங்கள், 15 வருடங்களாக காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அதிகாரி பீ.ருவன்புர தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் பின்னர், 1,200 பேரின் சடலங்கள் கராபிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இதன்போது, 200 பேரின் சடலங்களை, அப்பகுதி கிராம அலுவலர் அடையாளங்கண்ட பின்னர், உறவினர்களால் அந்தச் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. பின்னர், மேலும் 500 சடலங்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், 450 சடலங்களை அடையாளம் காண்பதற்கு எவரும் முன்வரவில்லை.

இதனையடுத்து, சடலங்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியதன் பின்னர், உடற்பாகங்களின் மாதிரிகள், கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆவணப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களில் 150 சடலங்கள், உறவினர்களின் ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, எஞ்சிய சடலங்களின் உடற்பாகங்கள், தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சுனாமி பேரலையில், இலங்கையில் 30,000 பேர் வரை உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!