நித்யானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்கள் எங்கே?..

குஜராத், கர்நாடக நீதிமன்றங்களில் நித்யானந்தா தொடர்பான வழக்குகள் சூடுபிடித்து வரும் நிலையில், அவர் தினசரி தனது சத்சங்கத்தில் புதிது புதிதாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். நித்யானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜனார்த்தன் சர்மா தனது மகளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தொடுத்த வழக்கின் விசாரணை, குஜராத் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தத்துவப்ரியா, அவரது தங்கை நித்ய நந்திதா ஆகிய இருவரும் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். மேலும், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டில் இருந்து வாக்குமூலமும் தாக்கல் செய்தனர். இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் தங்களது தந்தை ஜனார்த்தன சர்மாவால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். தாங்கள் தற்போது சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருப்பதாகவும் உறுதியளித்தனர்.

எனினும் வரும் ஜனவரி 16ம் தேதிக்குள் இருவரும் வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டின் இந்தியத் தூதரகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த 5ம் தேதி நடந்த விசாரணையின் போது, அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து வாக்குமூலம் தாக்கல் செய்த சகோதரிகள், தற்போது மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் தீவில் இருந்து வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். வரும் ஜனவரி 16ம் தேதிக்குள் அவர்கள் இந்திய தூதரகத்தில் ஆஜர் ஆவார்களா? அல்லது அப்போதும் வாக்குமூலம் மட்டுமே சமர்ப்பிப்பார்களா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!