ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் போலியான செய்திகள் – அங்கஜன்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் படி வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ்ப்பாணத் தில் போலியான செய்திகள் பரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“வருமானம் குறைந்த குடும்பங்களான சமுர்த்தி பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய அரசின் வேலைத்திட்டம் என இரு ஆவணங்கள் முகநூலில் பலரால் பரப்புரை செய்வதில் எவ்வித உண்மைத் தன்மையுமில்லை.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரின் கடிதம் வருடாந்தம் மாவட்ட செயலகத்தினால் வழமையாக வேலையற்றோரின் கணக்கெடுப்பைப் பெறுவதற்காகப் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மனித வலுத்திணைக்களத்தின் (HRD) விண்ணப்பப்படிவமானது வேலை தேடுவோரின் தகவல் சேகரிப்பு படிவமாகும்.

இவ் இரண்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை” என்று யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கைக்கு அமைவாக வறுமையை இல்லாதொழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் செயற்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!