ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கு சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

2015 தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், 2019 நொவம்பர் வெற்றியைத் தக்கவைக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

நேற்று முன்தினம் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“பொருளாதாரத்தை வலுப்படுத்திய போதும், ஏராளமான அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்திய போதும், மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தை 2015 ஆம் ஆண்டில் மக்கள் ஏன் நிராகரித்தார்கள் என்பதை அரசாங்க அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், 2019 நொவம்பர் வெற்றியைத் தக்கவைக்க முடியாது.

அரசியல்வாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்காக செல்லும்போது மக்கள் எந்த வகையிலும், சிரமங்களுக்கு ஆளாகக் கூடாது.

அரச பணியாளர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், அந்த சேவை ஊழல் இல்லாததாக இருக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!