மட்டக்களப்புக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்

மட்டக்களப்பு வரை விமான சேவைகளை விரிவாக்குவதற்கு இந்தியா ஆர்வம் காட்டுவதாக, சிறிலங்காவின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

”அண்மையில் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவைச் சந்தித்துப் கலந்துரையாடிய போதே, இந்தியாவில் இருந்து மட்டக்களப்புக்கு பயணிகள் விமான சேவைகளை நடத்துவதற்கு இந்தியத் தரப்பின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

இதற்காக மட்டக்களப்பு விமான நிலையம் அனைத்துலக விமான நிலையத்துக்குத் தேவையான வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்தியா இதற்கு உதவ முன்வந்துள்ளது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மட்டக்களப்புக்கும் சேவைகளை விரிவுபடுத்த இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!