இலங்கையிலிருந்து படகு மூலம் வெளியேறுவோர் தொகை அதிகரிப்பு!

கடந்த 2019ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நோக்கி படகு வழியாக வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த 2016, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து படகு மூலம் வெளியேற முயன்றவர்களின் எண்ணிக்கை சராசரியாக 64 ஆக இருந்துள்ளது.

தற்போதைய எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கடற்படையும் விமானப்படையும் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு வெளியேறியவர்களில் பெரும்பான்மையானோர் சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை, தேவேந்திரமுனை ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறியர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார் இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார.

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஊடகப் பேச்சாளர், இதில் சிலர் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேற தயாராகிக் கொண்டிருந்த நிலையிலும் பலர் இலங்கையின் கடல் எல்லைக்குள் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறியிருக்கிறார்.

அண்மையில், திருகோணமலை கடல் பகுதியிலிருந்து 4 பேர் வெளியேற முயற்சித்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய ஊடகப் பேச்சாளர், ஆட்கடத்தல் மற்றும் மக்கள் கடலில் தங்களை உயிரை பணயம் வைத்து பயணிப்பதை தடுக்க இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அரசு ஒரு வலுவான உறவை கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை தளபதி கிரெய்க் புரினி குறிப்பிட்டிருந்ததை நினைவூட்டினார்.

நீங்கள் உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளும் இப்பயணத்தின் மூலம் உங்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. ஆஸ்திரேலியா மிகக் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடித்து வருகவதால், படகு மூலம் சட்டவிரோதமாக பயணிக்கும் எவரும் ஆஸ்திரேலியாவில் வாழவோ அல்லது வேலை செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என இலங்கைப் பயணத்தின் போது ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை தளபதி கிரெய்க் புரினி எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!