சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு முதலில் நடவடிக்கை அவசியம்

அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்படும், நிலையான பாராளுமன்றம் அமைக்கப்படும் என்றும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் அவசியம் எனவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத் தொடரை நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க உரையிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

ஜனநாயக ரீதியிலான இராச்சியமொன்றில் வெற்றிகர நிலைமைக்கு அரசியலமைப்பு சட்டமே காரணமாகும். 1978 தொடக்கம் 19 தடவைகள் திருத்தப்பட்ட எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற தன்மையினால் தற்காலத்தில் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன. எமது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, நிலைப்பாடு மற்றும் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு தற்போது இருக்கின்ற அரசியலமைப்பில் சில மாற்றங்களை செய்யவேண்டும். விகிதாசார தேர்தல் முறையில் உள்ள சிறந்த விடயங்களை பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளையில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டினையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காக தற்காலிக தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்றும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தனது கொள்கை விளக்க உரையில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மக்களின் இறையாண்மையை உறுதி செய்கின்ற வலுவான சட்டவாக்கத்துறை, நிறைவேற்று மற்றும் சுயாதீன நீதிமன்றம் ஸ்தாபித்தலை சட்டரீதியான மாற்றத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அடிப்படைவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் பாராளுமன்றம் எவ்விதத்திலும் நாட்டுக்கு பொருந்தாது. ஒரு ஸ்திரத்தன்மையுடைய மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடிய பாராளு­மன்றம் உருவாக்கப்படும். இனவாத அரசியலுக்கு நாட்டு மக்கள் முற்றுப்புள்ளிவைத்துள்ளனர். இதனை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். பெளத்த மதத்தைப் பாதுகாத்து ஏனைய மதங்களுக்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்வேன். தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் புலனாய்வுத்துறை முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் பாதாள உலகக் குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும். மக்கள் நலத் திட்டங்கள் குறித்து நான் நேரடியாக கண்காணிப்பேன். அத்துடன் நாட்டில் வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்டு செயல்படுவோம். ஊழல் மோசடிகளுக்கு எதிராக எனது ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபாய ராஜபக் ஷ நேற்றைய தினம் ஆற்றிய கொள்கை விளக்க உரையினை பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். சர்வதேசமும் எதிர்பார்த்திருந்தது. இதனை விட சிறுபான்மையினத் தலைவர்கள் ஜனாதி­­­­­­­­பதியின் கொள்கை விளக்க உரையை எதிர்­பார்த்து காத்திருந்தனர்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை வைத்து அடுத்த கட்ட தீர்மானங்களை எடுப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை தீர்மானித்திருந்தது. இதனை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தி­ருந்தனர்.

புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன? அவரது அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையும் என்ற விடயங்கள் தொடர்பில் சிறுபான்மையின கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருந்தன.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்தபோது ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் தனக்கு ஆதரவு வழங்காமை தொடர்பில் ஆதங்கம் தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் ஒன்றி­ணைந்து செயற்பட வருமாறு சிறுபான்மை மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருந்தமை அவரது கருத்துக்களிலிருந்து தெரியவந்திருந்தது. பெரும்பான்மையின மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவிடயத்தையும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று அவர் பல தடவை­கள் கூறியிருந்தார். இதனைவிட அதிகாரப் பகிர்வு குறித்தோ, சமஷ்டி குறித்தோ பேசுவதில் எந்தப்பயனும் இல்லை என்றும் அபிவிருத்தியின் மூலமே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இத்தகைய நிலைப்பாடு சிறுபான்மையின மக்களை பொறுத்த­­­­வரையில் குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. வடக்கு, கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கும் இந்த நிலைப்பாடானது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி­யிடும்போதோ அல்லது அதன் பின்னரோ இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்தோ எந்தவித வாக்குறுதிகளையும் கோத்தபாய ராஜபக் ஷ வழங்கியிருக்கவில்லை. ஆனாலும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தமது பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வுகாண முயலவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் தலைமைகள் மத்தியிலும் காணப்படுகின்றன. அதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி கோத்தாபயராஜபக் ஷ தற்போதும் நிற்கின்றமை அவரது கொள்கை விளக்க உரையிலிருந்து தெளிவாக தெரிகின்றது. ஜனாதிபதி கொள்கை விளக்க உரையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் அபிவிருத்தி தொடர்பிலும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்தும் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அரசியலமைப்பின் மாற்றம், தேர்தல் முறையில் மாற்றம் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியிருந்தார்.

சிறுபான்மையின மக்கள் எதிர்பார்த்ததைப் போன்று அவர்களது அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலோ அல்லது அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலோ எந்தவித கருத்துக்களையும் அவர் தனது கொள்கை விளக்க உரையில் சுட்டிக்காட்டவில்லை.

இலங்கையரை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படும் அபிமானமான இனமாக்குவது எனது அபிலாஷையாகும். அந்த நோக்கத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின்போது ஒரு இனம் என்ற ரீதியில் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் மூலம் எமது முன்னிலையில் உள்ள சவால்களை வெற்றிபெற முடியும். நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாட்டைப் பற்றி பெருமைப்படுகின்றேன். எனக்கு எனது நாட்டின் மீது தொலைநோக்கு உள்ளது. சரித்திரத்தினால் தற்காலிக சந்ததிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பொறுப்பை கையேற்பதற்கு என்னுடன் ஒன்றுசேருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜனாதிபதி தனது உரையின் இறுதியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதிலிருந்து அவர் நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே கண்­ணோட்­­­டத்துடன் பார்ப்பது தெளிவாகின்றது. உண்மையிலேயே ஜனாதிபதியின் இத்தகைய பார்வை நல்லதொரு விடயமாகும். சகல இன மக்களும் சமத்துவமாக வாழும் நிலைமை நாட்டில் உருவாக வேண்டும் என்பதே சிறுபான்மையின மக்களின் ஆதங்கமாகவும் உள்ளது. ஆனால் அத்தகைய சமத்துவமான நிலைமை நாட்டில் உருவாக்கப்பட்டு விட்டதா என்பதே தற்போதைய கேள்வியாகின்றது.

தற்போதைய நிலையில் பெரும்பான்மை மக்களை போன்று சிறுபான்மையின மக்கள் சமத்துவத்தை இன்னமும் உணரவில்லை. ஏனெனில் அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவில்லை. இதனால்தான் அரசியல் தீர்வொன்றின் மூலம் அதற்கான நிலைமை உருவாக்கப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் கோரி வருகின்றனர்.

அதற்கான சூழல்நிலையினை இன்றைய அரசாங்கம் உருவாக்க வேண்டும். அதன் பின்னர் சகல மக்களும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பக்கூடிய நிலைமை ஏற்படும். எனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டியது அவசியமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!