சி.ஐ.எஸ்.எப் பொலிஸை கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா ரவுடி!

நெய்வேலி சுரங்கத்தில் காப்பர் திருடிய கஞ்சா வியாபாரியை பிடிக்கச் சென்ற, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை முட்டி போட வைத்து, கத்தியால் குத்திய பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில் முட்டிபோட்டு கத்தியுடன் மிரட்டும் ரவுடியிடம் உயிர்ப் பிச்சை கேட்கும் இவர், கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -15 என்எல்சி குடியிருப்பில் வசித்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் தாஸ்..! என்எல்சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராகப் பணியாற்றி வரும் செல்வேந்திரன் என்பவரை கத்தியால் குத்திவிட்டு காப்பரை திருடிக் கொண்டு தப்பிய, மந்தாரக்குப்பத்தை சேர்ந்த கஞ்சா மணி என்பவனை விரட்டிச்சென்று அவனது இருசக்கர வாகன சாவியை எடுத்ததால் கஞ்சா போதைக் கும்பலிடம் சிக்கிக் கொண்ட தாசின் பரிதாப நிலைதான் இது..!

இதனை செல்போனில் படம் பிடித்த மற்றொரு சி.ஐ.எஸ்.எப் வீரரையும் கத்தியால் தாக்க முயல, அவர் நெய்வேலி உளவுப்பிரிவு ஏட்டு ஜான் பெயரைக் கூறி தப்பிக்கும் நிலை ஏற்பட்டது. பட்டப்பகலில் துணிச்சலாக மத்திய பாதுகாப்புப் படையினரையே கொலை செய்யும் அளவிற்கு கையில் கத்தியுடன் தாக்கும் கஞ்சாமணியின் செயல் ரவுடிதனத்தின் உச்சம். அந்த அளவிற்கு உளவுப்பிரிவு ஏட்டு ஜான் மற்றும் காவல்துறையினர் கஞ்சா மணிக்கு முழு சுதந்திரம் கொடுத்து வைத்துள்ளது இந்த செய்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக புகார் செய்த நிலையிலும் கஞ்சா மணியிடம் காவல் நிலைய பெண் ஆய்வாளர் சாவகாசமாக நலம் விசாரித்து செல்கிறார் என்றால் மக்களின் பாதுகாப்பு என்ன நிலையில் இருக்கும் என்கின்றனர் பாதிப்புக்குள்ளான மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர். நெய்வேலியின் பல பகுதிகளிலும் கஞ்சா தடையின்றி விற்கப்படுவதால் கஞ்சா மணி போன்ற சமூக விரோதிகள் மக்களுக்கு அச்சுறுத்தலாக வலம் வருவதாக கூறப்படுகின்றது. கஞ்சா மணி நெய்வேலி காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுவாரா என்பதே இந்த பதைபதைப்பான காட்சிகளைப் பார்த்த வர்களின் ஒரே கேள்வியாக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!