மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி : அகிலவிராஜ்

நாட்டு மக்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி சம்பாஷணைகள் அடங்கிய குரல்பதிவுகளை வெளியிட்டு அதனையே மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கி, உண்மையான பிரச்சினைகளை மறக்கடிப்பதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டினார்.

மேலும் எதிர்வரும் பொதுத்தேர்தல் வரை இத்தகைய சர்ச்சைகளைத் தோற்றுவித்து, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மழுங்கடிப்பதன் ஊடாக தேர்தலில் பெருமளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கமே இதன் பின்னணியில் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல்பதிவுகள் வெளியாகியிருப்பதுடன், அதுகுறித்து அனைவரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, அதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றையும் நியமிக்க முடியும். அதேபோன்று சட்டதிட்டங்களுக்குப் புறம்பாகவும், நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் விதமாகவும் எவரேனும் செயற்பட்டிருப்பின் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் இவற்றை விடவும் நாட்டு மக்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி சம்பாஷணைகள் அடங்கிய குரல்பதிவுகளை வெளியிட்டு அதனையே மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கி, உண்மையான பிரச்சினைகளை மறக்கடிப்பதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தல் வரை இத்தகைய சர்ச்சைகளைத் தோற்றுவித்து, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மழுங்கடிப்பதன் ஊடாக தேர்தலில் பெருமளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கமே இதன் பின்னணியில் இருக்கிறது.

எனவே இத்தகைய சர்ச்சைகளின் மூலம் மக்கள் பிரச்சினைகளை மழுங்கடிக்கச் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!