ஜனாதிபதி கோத்தாபயவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2020 பாராளுமன்ற தேர்தல்

முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார்.

மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளவும் கொண்டு வருவதற்கு 19 ஆவது திருத்தத்தை முற்றாகக் கைவிடுவதில் அல்லது அதில் பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பு செய்வதில் கோதாபய மிகுந்த அக்கறையாக இருக்கிறார்.

சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த 19 ஆம் திருத்தம் பிரதமரினதும் பாராளுமன்றத்தினதும் அதிகாரங்களை அதிகரிக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக் குறைத்திருக்கிறது. அதனால் இது அதிகார மையங்களுக்கும் இடையிலான போட்டி களத்தில் பல இடங்களில் குழப்ப நிலையும் முரண் நிலையும் காணப்படுகிறது.

நீதித்துறை , பொலிஸ் , அரசாங்க சேவை மற்றும் தேர்தல்கள் திணைக்களம் போன்ற அரசின் பல்வேறு பிரிவுகளுக்கும் உயர் பதவி நியமனங்களை செய்வதற்கு 19 ஆவது திருத்தத்தின் வாயிலாக சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிரக்கின்றன. மக்களினால் தெரிவு செய்யப்படாத இந்த ஆணைக்குழுக்களுக்கு இந்த அரசியலமைப்பு திருத்தம் பெருமளவு அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி தலைமையிலான நிறைவேற்று அதிகார பீடம் இங்கு ஓரங்கட்டப்படுகிறது. பிரதிநிதித்துவ அரசியல் கோணத்தில் இருந்து பார்க்கும் போது இது ஜனநாயக விரோதமானதாக இருப்பதுடன் தகுதியீனத்தையும் ஊக்கப்படுத்துகின்றது.

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்புலத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் தகுதியீனம் வெளிப்படையாகத் தெரிந்த போதிலும், கூட அவரை பதவி நீக்குவதற்கான அதிகாரம் தனக்கு இருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகுந்த கசப்புணர்வுடன் முறையிட்டார். பொலிஸ் திணைக்களத்தின் தலைவரான பொலிஸ் மா அதிபர் தனக்கு கீழ் வருகின்ற உயர் அதிகாரிகளை தெரிவு செய்ய முடியாது. ஏனென்றால் பொலிஸ்துறை சாராத உறுப்பினர்களைக் கொண்ட பொலிஸ் ஆணைக்குழு மாத்திரமே இந்த நியமனங்களைச் செய்ய முடியும். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் இருக்கின்ற போதிலும் சுயாதீன ஆணைக்குழுக்களில் இருக்கின்ற -மக்களால் தெரிவு செய்யப்படாத நபர்களினாலேயே முக்கியமான நியமனங்கள் செய்யப்படுகின்றன என்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ முறையிட்டிருக்கிறார்.

ஜனாதிபதி என்ற வகையில் ஜனவரி 3 ஆம் திகதி முதல் தடவையாக பாராளுமன்றத்தில் கொள்கை விளக்கவுரை நிகழ்த்திய ஜனாதிபதி கோதாபய ஏற்கனவே 19 தடவைகள் திருத்தத்துக்கு உள்ளான 1978 அரசியலமைப்பை மாற்றியமைக்க உத்தேசித்திருப்பதாக அறிவித்தார். இன்றைய அரசியல் அமைப்புக்கு செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் பெருமளவு பிரச்சினைகள் உருவாக வழிவகுத்திருக்கிறது. ஏனென்றால் இந்த திருத்தங்களின் விளைவாக அரசியலமைப்பு விளங்கா தன்மையையும் குழப்ப நிலையையும் கொண்டிருக்கிறது என்றும் தனது பாராளுமன்ற உரையில் கோதாபய தெரிவித்தார்.

கூடுதல் அதிகார பரவலாக்கலை செய்வதாக உறுதியளித்து பின்னர் அந்த உறுதி மொழியைக் காப்பாற்றாத அல்லது காப்பாற்ற முடியாமல் போன முன்னாள் ஜனாதிபதிகளை போலன்றி கோதாபய ராஜபக்ஷ கூடுதல் அதிகார பரவலாக்கத்துக்கோ அல்லது சமஷ்டி முறைமைக்கோ தான் ஆதரவில்லை என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

‘ எனது பதவி காலத்தில் நாட்டின் ஒற்றையாட்சி அந்தஸ்தை எமது அரசியலமைப்பின் பிரகாரம் நான் எப்போதும் பாதுகாப்பேன் ‘ என்று ஜனாதிபதி உறுதியளித்தார். தமிழர்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சமஷ்டி முறைமையை கோரி வந்த போதிலும் 1948 ஆம் ஆண்டு முதலிலிருந்து நீடிக்கின்ற யதார்த்த நிலையையே கோதாபய இவ்வாறு கூறினார். சமஷ்டி முறை இல்லாவிட்டாலும் கூடுதல்பட்ச அதிகார பரவலாக்கலை செய்வதாக உறுதியளித்த ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்றவர்களின் அரசாங்கங்களினால் கூட இந்த உறுதி மொழிகளை நிறைவேற்ற முடியாமல் போனது. பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சமஷ்டி முறைக்கும் பெருமளவு அதிகார பரவலாக்கத்திற்கும் எதிரானவர்களாக இருப்பதே இதற்கு காரணமாகும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத எதையாவது கோருவதோ அல்லது உறுதியளிப்பதோ அர்த்தமற்றது என்று கோதாபய ராஜபக்ஷ வெளிப்படையாக கூறுகின்றார்.

பெரும்பான்மை சமூகத்தினதும் சிறுபான்மை சமூகங்களினதும் ஒப்பீட்டளவிலான முக்கியத்துவம் குறித்து தனதுரையில் குறிப்பிட்ட ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ‘ பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளை நாம் எப்போதும் மதிக்க வேண்டும். அப்போது மாத்திரமே மக்களின் சுயாதிபத்தியம் பேணி பாதுகாக்கப்படும். ‘ என்று கூறினார்.

‘ என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களை அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். கிங் மேக்கர் பாத்திரத்தை வகிப்பதன் மூலம் இந்த நாட்டின் அரசியலை சூழ்ச்சித் தனமாக கையாளவும் கட்டுப்படுத்தவும் இனிமேல் எவரினாலும் சாத்தியமாகாது. என்பதை மக்களில் பெரும்பான்மையானவர்கள் நிரூபித்திருக்கிறார்கள் ‘ என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவினால் மாத்திரமே நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றதையே அவர் இவ்வாறு கூறுகின்றார். தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறிய கட்சிகளின் அரசியலுக்கு ஏற்பட்ட தாக்கத்தைப் பற்றியும் அவர் கூறியிருக்கிறார். உறுதியான பெரும்பான்மை எந்தவொரு கட்சிக்கும் கிடைக்காத பாராளுமன்றத்தில் இந்த சிறிய கட்சிகள் கிங் மேக்கர்களாக செயற்பட்டு வந்தன என்பதையே ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைவரம் தொடர முடியாது என்பதை சிறுபான்மைச் சமூகத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்த பாங்கு இதை வெளிக்காட்டுகின்றது. ‘ சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தேசியக் கடமையில் ஒன்றிணையுமாறு அவர்கள் எல்லோரையும் நான் அழைக்கின்றேன் எமது சமூகத்தில் பிரிவினையை விதைக்கும் குறுகிய நிகழ்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியலை நிராகரிக்குமாறும் அவர்களை நான் கேட்டுக் கொள்கின்றேன். ‘

தனது நிகழ்ச்சி திட்டத்தில் தேசிய பாதுகாப்பிற்கே அதி முதன்மையான இடம் என்றே ஜனாதிபதி கூறினார். ஒரு தேசிய கோணத்தில் இருந்து பாதுகாப்பை நோக்குவதன் மூலம் கோதாபய ராஜபக்ஷ ( இந்தியாவின் வற்புறுத்தலில் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்கான) 13 ஆவது திருத்த்ததின் ஏற்பாடுகளின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு இருக்கும் பொலிஸ் அதிகாரங்களை கோதாபய நிராகரிக்கின்றார்.

விஜயதாசவின் சட்ட மூலங்கள்

அதே வேளை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ அரசியலமைப்புக்கான 21 ஆவது , 22 ஆவது திருத்த சட்ட மூலங்கள் என்ற வடிவில் இரு சட்ட மூலங்களை பிரேரித்திருக்கின்றார். இவ்விரு சட்ட மூலங்களுமே கோதாபயவின் நோக்கங்களுக்கு இசைவானவை. உத்தேச 21 ஆவது திருத்த சட்ட மூலம் தேர்தல்களில் மக்களினால் தெரிவு செய்யப்படுவதற்கு அரசியல் கட்சிகள் மாவட்ட ரீதியில் பெற வேண்டிய குறைந்த பட்ச வீதத்தை 5 வீதத்திலிருந்து 12.5 வீதமாக அதிகரிக்கிறது. இது சிறிய கட்சிகளை இல்லாமல் செய்து பாராளுமன்ற ஆசனங்கள் சிதறடிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதுடன் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைகளை இலகுவாக்குகின்றது.

22 ஆவது திருத்த சட்ட மூலம் சுயாதீன அரசியலமைப்பு பேரவையின் அதிகாரங்களை துண்டாக்குகின்றது. நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு பிரதம நீதியரசரையும் உச்ச நீதிமன்றத்துக்கான ஏனைய நீதிபதிகளையும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையும் ஜனாதிபதி நியமிப்பார் என்று அது கூறுகிறது. சட்ட மா அதிபர் , கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் , குறைகேள் அதிகாரி மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஆகியோரையும் ஜனாதிபதியே நியமிப்பார். இந்த விடயங்கள் சகலதிலும் ஜனாதிபதி பிரதமரிடம் மாத்திரமே ஆலோசனை கேட்க வேண்டிய தேவை இருக்கிறது. என்று அந்த சட்ட மூலம் கூறுகிறது.

இந்த சட்ட மூலம் ஜனாதிபதி முப்படைகளின் பிரதான தளபதி என்ற வகையில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிப்பதற்கும் விதந்துரைக்கிறது. அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் எந்தவொரு அமைச்சையும் ஜனாதிபதியால் தனது பொறுப்பின் கீழ் எடுக்க முடியும். அத்துடன் அரசியல் விலை பேசலை இல்லாமல் செய்யும் ஒரு முயற்சியாக அமைச்சரவை உறுப்பி;னர்களின் எண்ணிக்கையை இந்த திருத்த யோசனை குறைக்கிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்த செயற்திட்டங்களை உற்சாகமாக முன்னெடுக்கலாம் என்று நம்புகின்றார்.

தகுதி மற்றும் கல்வி தகைமைகளின் அடிப்படையில் அதிகாரிகளை நியமிப்பதற்கான சுதந்திரத்தை அவர் பெறுவார். வெறுமனே அரசியல் அல்லது தனிப்பட்ட நோக்கங்களை நிறைவு செய்வதற்காக நியமனங்கள் செய்வதை அவரால் தடுக்க கூடியதாக இருக்கும். அவசியமான ஆனால் அதே வேளை மக்கள் செல்வாக்கை பெற முடியாத அரசியல் அல்லது பொருளாதார தீர்மானங்களையும் அவரால் எடுக்க கூடியதாக இருக்கும். அத்தகைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட முன்னைய சந்தர்ப்பங்கள் சிலவற்றில் அவை முறியடிக்கப்பட்டன. ஆனால் அவ்வாறு முறியடிக்கப்படும் என்ற பயமின்றி அவரால் தீர்மானங்களை எடுக்க கூடியதாக இருக்கும்.

பி.கே.பாலசந்திரன் –

(நியூஸ் இன் ஏசியா)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!