சட்டம் ஒழுங்கு அமைச்சை ஏற்கமாட்டேன் – சரத் பொன்சேகா

சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை இனிமேல் வழங்க முன்வந்தாலும், தான் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

தியபெதும பிரதேசத்தில் யானைகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயச் சென்ற சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு பிராந்திய அபிவிருத்தி மற்றும் வன வாழ் உயிரினங்கள் அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டது.

ஐதேக தலைமையினால் சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு சரத் பொன்சேகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும், அவருக்கு அந்தப் பதவியை வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்டார்.

இதனால் சரத் பொன்சேகா வெறுப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!