பொலிஸாரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிக்கு மாவுக்கட்டு வைத்தியம்!

நெய்வேலி சுரங்கம் அருகே மத்திய பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தி மண்டியிட வைத்த ரவுடி கஞ்சா மணி, தப்பிச்செல்லும் போது வழுக்கி விழுந்ததில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டுபோடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இவர் தான் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு சவால் விட்டு வந்த பிரபல கஞ்சா வியாபரி கஞ்சா மணி..! சில மாதங்களுக்கு முன்பு தன்னை பிடிக்க வந்த போலீசார் முன்பு பிளேடால் அறுத்துக் கொண்டு குரல் கொடுத்த கறுஞ்சிறுத்தை.. கஞ்சா வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று விட்டு ஜாமீனில் வந்த கஞ்சாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காப்பர் கம்பி திருடி மத்திய பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரனிடம் சிக்கிக் கொண்டார். அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிவந்த மணியை விரட்டிச்சென்ற மத்தியபாதுகாப்பு படை வீரரான தாஸ் என்பவரை முட்டி போட வைத்து கத்தியால் குத்த முயன்று மரண பயத்தை காட்டிய கஞ்சா மணியின் அட்டகாசம் காண்போரை அதிர வைத்தது. தன்னை ஒரு சர்வதேச ரவுடி போல நினைத்துக் கொண்டு கையில் வைத்திருந்த சைனா கத்தியை காட்டி தன்னை பிடிக்க வந்த மத்திய பாதுகாப்பு படையினரை நடுங்க வைத்த கஞ்சாமணி மீது போலீஸ் நடவடிக்கை பாயுமா ? என்று கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த கஞ்சா மணியை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறப்பு தனிப்படையினர் கஞ்சாமணியை பிடிக்க களமிறக்கப்பட்டனர். அரைக்கால் டவுசர் அணிந்த அர்னால்டு என்ற நினைப்பில் அசால்ட்டாக சுற்றி வந்த கஞ்சா மணி காவல்துறையினர் தன்னை பிடிக்க வருவதை அறிந்து சுவர் ஏறிகுதித்து தப்பி ஓடியுள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக கஞ்சா மணி வழுக்கி விழுந்ததால் கத்தியை பிடித்த வலது கை, மற்றும் எட்டி உதைத்த இடது கால் ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இருந்தாலும் மனித நேயத்துடன் மணியை மீட்ட போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து மணிக்கு மாவுகட்டு போட ஏற்பாடு செய்தனர்.

கடந்த சில மாதங்களாக கஞ்சா மணி என்று கவுரவமாக சுற்றி திரிந்தவன், போலீசுக்கு ஓட்டம் காட்டியதால் மாவுகட்டு மணியாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டான். அவனுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளித்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படைவீரரை கத்தியால் குத்திய மணிக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொடூரமாக சுட்டு கொன்று விட்டு துப்பாக்கியுடன் ஓடி ஒழிந்து வரும் தீவிரவாதிகளையும் காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!