தமிழ்பேசும் எம்.பிக்களை குறைக்க சதி!

தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிக்கவும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைப்பதற்குமான சதியை புதிய அரசாங்கத்தின் முகவர்கள் மாவட்ட ரீதியாக செய்து வருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சிறுபான்மை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய ஒரு தேர்தலாக வரும் பொதுத் தேர்தல் இருக்கின்றது. புதிய அரசாங்கத்தின் வருகையோடு இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி அதனை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்கின்றவர்கள், சிறுபான்மையினருக்கான பல்லாண்டு காலமாக இருந்து வருகின்ற உரிமைகளைக் கூட இல்லாமலாக்க வேண்டும் என்று பேசி வருவதை நாங்கள் பார்க்கிறோம்.

அதேபோல், இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டிலே ஜனநாயக அரசியலுக்குள் வந்த சிறுபான்மைக் கட்சிகளை எல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும் எனவும் கங்கணம் கட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலை இந்நாட்டிலே சிறு கட்சிகளையும் சிறுபான்மை சமுதாயத்தையும் ஜனநாயகத்தை நம்பி வாழ்கின்ற மக்களுடைய எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்ற ஒரு சதியாகவே நாங்கள் பார்க்கிறோம்.

எனவே எதிர்காலத்தில் ஒரு இனக்கலவரம் வந்து விடாமல் எல்லோரும் சகோதரத்துவத்துடனும் சமாதானமாகவும் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்கின்ற ஒரு நிலை வரவேண்டுமாக இருந்தால் அடுத்த தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!