அரச பட்டங்களை துறக்கும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தனர். இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத், சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் அரச குடும்ப உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஹாரியும், மேகனும் புதிய வாழ்க்கையை தொடங்கும் விருப்பத்துக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாக ராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்தார். இந்த நிலையில் இளவரசர் ஹாரியும், மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுகின்றனர். அரச பட்டங்களையும் துறக்கின்றனர் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அரச குடும்பத்தினர் எச்.ஆர்.எச். (மாட்சிமை தங்கிய அரச குடும்பத்தினர்) என்ற பட்டத்தை பயன்படுத்துவது வழக்கம். இந்த பட்டங்களை ஹாரி, மேகன் தம்பதியர் துறக்கின்றனர். இதே போன்ற நிலையை இளவரசர் சார்லசை விவாகரத்து செய்தபோது (1996) ஹாரியின் தாயார் டயானாவும் அடைந்தார். வின்ட்சார் கோட்டை அருகே தங்களது இல்லத்தை புதுப்பிப்பதற்காக ஹாரி, மேகன் தம்பதியர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெற்ற 2.4 மில்லியன் பவுண்ட் தொகையை (சுமார் ரூ.22 கோடியே 8 லட்சம்) திரும்ப அளித்து விடுவதாகவும் அரண்மனை அறிவிப்பு கூறுகிறது.

ராணி இரண்டாம் எலிசபெத் பெயரால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “பல மாதங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை மற்றும் சமீபத்தில் நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து எனது பேரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு ஆக்கப்பூர்வமான, ஆதரவான வழியை நாங்கள் கண்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமான ஆய்வின் விளைவாக அவர்கள் அனுபவித்த சவால்களை நான் உணர்கிறேன். மேலும் சுதந்திரமான ஒரு வாழ்க்கைக்கான அவர்களது விருப்பத்தை நான் ஆதரிக்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!