ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள்!

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும், சமூகவலைத்தளங்களில் அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்களும் பதிவாகியதுடன், 3 இணைய ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மிக நீண்ட நேரம் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையானது ஊடக சுதந்திரம் குறித்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்கான கோட்பாடுகள் பிரகடனத்திற்கு இசைவான முறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவிற்கு அழைப்புவிடுத்திருந்தது.

அதன்படி இலங்கைக்கு வருகைதந்த 60 குறுகிய மற்றும் நீண்டகால கண்காணிப்பாளர்களைக் கொண்ட குழு 297 வாக்களிப்பு நிலையங்களுக்கும், 25 இற்கும் அதிகமான வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கும் விஜயம் செய்திருந்தது. அதன்படி அவதானிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அக்குழு தமது பூர்வாங்க அறிக்கையை நவம்பர் 18 ஆம் திகதி சமர்ப்பித்தது.

அதன்பின்னர் டிசம்பர் நடுப்பகுதி வரை அந்தக்குழு இலங்கையில் தங்கியிருந்து தேர்தலுக்குப் பின்னரான காலகட்டத்தில் தெரிவிக்கப்படக்கூடிய முறைப்பாடுகளையும், வேண்டுகோள்களையும் அவதானித்தது.

அந்தச் செயன்முறைகளுக்குப் பின்னர் சுமார் இரு மாதங்கள் கழித்து மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான தேர்தல் கண்காணிப்பாளர் மரிஸா மத்தியாஸ், தேர்தல் செயன்முறைகளில் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய மேம்பாடு தொடர்பான 23 விதப்புரைகளுடன் கண்காணிப்புக் குழுவின் இறுதி அறிக்கையை நேற்று கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில்வைத்து வெளியிட்டுவைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!