மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் தொடர்பு – ரவி கருணாநாயக்க விளக்கம்!

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் தாம் தொடர்புபட்டிருக்கவில்லை என்பது வங்கியின் தடயவியல் ஆய்வறிக்கை ஊடாக அம்பலமாகியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எந்தக் குற்றமும் இன்றி ஊடகங்களை வைத்து உருவாக்கப்பட்ட பிரச்சினை தொடர்பில் நாங்கள் பொறுமையுடன் பதில் வழங்கியுள்ளோம். இதுதான் உண்மை என்பது கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தடயவியல் அறிக்கை தற்போது வெளிவந்து இன்று நான் முழுவதிலும் விடுவிக்கப்பட்டுள்ளேன். எவ்வளவு காலஞ்சென்றாலும் உண்மை வெல்லும் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

கோப் குழுவின் ஊடாக நடவடிக்கை எடுத்து உண்மையை அம்பலப்படுத்த வேண்டும். 2002ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை அப்போதைய ஆட்சியினால் பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் ஏற்பட்ட தவறுகளை கோப் குழுவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் நான்கு அல்லது ஐந்து நபர்களே உண்மையான குற்றவாளிகள் எனக் கூறுகின்றேன்.

அப்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர, கபீர் ஹாஷிம், ஹர்ஷ டி சில்வா, சுஜீவ சேனசிங்க, எரான் விக்ரமரத்ன உள்ளிட்டவர்களால் வெறுமையான பிரச்சினை ஒன்றையே ஏற்படுத்தினார்கள். இன்று விடுதலையாகியிருக்கின்றோம். ஆகவே இந்த கட்சிக்கு இழைத்த பிழையை சரிப்படுத்துமாறு கோருகின்றேன். இதுவரை ஏற்பட்டவற்றை ஓரங்கட்டி ஐக்கிய தேசியக் கட்சியாக முன்நகர்வோம். ஒற்றுமையாக பயணிப்பதே இப்போதைய தேவையாக உள்ளது. மக்கள் இந்த உண்மையை அறிந்துகொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!