நிர்பயா பாலியல் வழக்கு: தூக்கு தண்டனை உறுதியானது!

டெல்லி நிர்பயா வழக்கில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த குற்றவாளி முகேஷ் சிங் என்பவனின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு குற்றவாளியான அக்சய் சிங் என்பவன், தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்திருக்கிறான். டெல்லியில், கடந்த 2012ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான 6 பேரில், ஒரு சிறுவன் தண்டனை காலம் முடிந்து விடுதலையானான். மற்ற ஐவரில், ஒருவன் உயிரிழந்துவிட, நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் நால்வரும், வருகிற ஒன்றாம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தூக்கிலிடப் பட உள்ளனர்.

இந்நிலையில், நான்கு குற்றவாளிகளில், முகேஷ் சிங் என்பவன், தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தான். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை கருணை மனுவை நிராகரித்திருப்பதற்காக கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் திருப்தி அளிப்பதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் முகேஷ் சிங்கிற்கு தூக்கு தண்டனை விவகாரத்தில் சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் அவன் ஒன்றாம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே மசயம் மற்றொரு குற்றவாளியான அக்சய் சிங் என்பவன், தூக்குத் தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி, இன்று சீராய்வு மனு ஒன்றை, தாக்கல் செய்திருக்கிறான். ஏற்கனவே, தூக்கு தண்டனையை சீராய்வு செய்யக்கோரி, அக்சய் சிங் தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!