82 அடி உயரத்தில் உள்ள பீப்பாயில் 78 நாட்களாக தங்கியிருந்த நபர்

82 அடி உயர இரும்பு கம்பத்தின் மேல் உள்ள பீப்பாயில் தங்கியிருந்து, தனது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க சாதனையாளர் 78 நாட்களுக்குப் பிறகு கீழே இறங்கினார்.

தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் வெர்னன் க்ரூகர். இவர் உயரமான கம்பத்தின் உச்சியில் பொருத்தப்பட்ட பீப்பாயில் அதிக நாட்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதனை படைத்தவர். கடந்த 1997ம் ஆண்டு 25 மீட்டர் உயர இரும்பு கம்பத்தின் உச்சியில் பொருத்தப்பட்ட பீப்பாயில் 67 நாட்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதனை படைத்தார்.

இந்நிலையில், தற்போது 82 அடி உயர இரும்பு கம்பத்தின் உச்சியில் பொருத்தப்பட்ட பீப்பாயில் 78 நாட்கள் தங்கியிருந்து தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

இவரது முயற்சிக்காக 82 அடி உயர கம்பத்தின் உச்சியில் சுமார் 132 கலன் கொள்ளளவு உடைய பீப்பாய் (பேரல்) பொருத்தப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் மேலே சென்ற வெர்னன் க்ரூகர் 78 நாட்கள் 23 மணி மற்றும் 14 நிமிடங்கள் மேலே தங்கியிருந்துள்ளார். இதையடுத்து நேற்று அவர் கீழே இறங்கினார்.

இதுகுறித்து வெர்னன் கூறுகையில் ‘வேறோரு நபர் இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். எனது சொந்த சாதனையை மீண்டும் முறியடிக்க முயற்சிக்க விரும்பவில்லை.

இந்த சாதனை முயற்சியின் போது, தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டினேன். திரட்டப்பட்ட பணம், கை கால் வலிப்பு நோய் மையம் மற்றும் பெல்ஃபாஸ்ட் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்’ என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!