திறமையற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள் – ப.சிதம்பரம் பேச்சு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வேலையின்மை அதிகரிப்பும், நுகர்வு திறன் குறைவும் நாட்டை ஏழை ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அச்சமும், நிச்சயமற்ற தன்மையும் நிலவி வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் 4 ஆண்டுகளாக தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், “இந்திய பொருளாதாரம், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது” என்று கூறினார். ஆனால், நான் சொல்கிறேன். தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே நோயாளி இருக்கிறார். ஆனால், திறமையற்ற டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

யார் டாக்டர்?

தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே நோயாளி இருப்பதும், திறமையற்ற டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதும் மிகவும் ஆபத்தானது. இந்த நிலைமையில், ‘எல்லோருக்கும் வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்று கோஷமிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? மோடி அரசால் அடையாளம் காண முடிந்த திறமையான டாக்டர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகியோர்தான் அவர்கள். உங்கள் டாக்டர்கள் யார் என்று சொல்லுங்கள். நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சியை மோடி அரசு தீண்டத்தகாததாக கருதுகிறது. எனவே, காங்கிரசுடன் ஆலோசனை கேட்க விரும்புவதில்லை.

தான் என்னும் எண்ணம்

பொதுமக்கள் கைகளில் பணத்தை போடுவதற்கு பதிலாக, கம்பெனி வரி குறைப்பு என்ற பெயரில், 200 கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் பணத்தை போட்டுக் கொண்டிருக்கிறது, மோடி அரசு. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது 160 நிமிட பட்ஜெட் உரையில், பொருளாதாரம் பற்றியோ, அதன் நிர்வாகம் பற்றியோ எதுவும் பேசவில்லை. பொருளாதார ஆய்வு அறிக்கையில் இருந்து எந்த யோசனையையும் எடுத்துக் கொள்ளவில்லை.

நீங்கள், ‘தான்’ என்னும் எண்ணத்தில் இருக்கிறீர்கள். உங்கள் குரலை மட்டுமே கேட்க விரும்புகிறீர்கள். மோடி அரசு தனது தவறுகளை ஒப்புக்கொள்வது இல்லை. மறுப்பு உலகிலேயே வாழ்கிறது.

பண மதிப்பிழப்பு

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதும், அவசர கதியில் ஜி.எஸ்.டி. அமலாக்கப்பட்டதும் நினைவுச்சின்னங்களாகி விட்ட தவறுகள். இவை பொருளாதாரத்தை அழித்து விட்டன. கடந்த 6 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வேளாண்மை, வெறும் 2 சதவீதம் மட்டும் வளர்ந்துள்ளது. ஆனால், நுகர்வோர் விலை பணவீக்கம் 11 மாதங்களில் 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் 12.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பல்வேறு வகையான கடன்கள் சரிவை சந்தித்துள்ளன. ஒட்டுமொத்த தொழில் குறியீட்டு எண் வெறும் 0.6 சதவீத வளர்ச்சிதான் அடைந்துள்ளது. அனல் மின் நிலையங்கள், தங்கள் உற்பத்தி திறனில் 55 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்கின்றன. தொழிற்சாலைகள், மூடப்பட்டு விட்டன அல்லது மூடப்படும் நிலையில் உள்ளன. இதுதான் பொருளாதாரத்தின் நிலை. இதை படம்பிடித்து காட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவையில்லை.

எத்தனை காலத்துக்கு பழி போடுவீர்கள்?

வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதுகுறித்த அறிக்கையை மத்திய அரசு மறைத்து விட்டது. கடந்த 2019-2020 பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, மூலதன செலவு, நிகர வரி வருவாய் என எதுவுமே இலக்கை எட்டவில்லை.

இத்தனைக்கும் கீழ்நிலை வரி அதிகாரிகளுக்கு அபரிமிதமான அதிகாரம் கொடுத்தும் வரி வசூல் அதிகரிக்கவில்லை. உங்களிடம் செலவழிக்க பணமே இல்லை. வெறும் எண்களை கொண்டு மறைக்க பார்க்கிறீர்கள். எண்கள், நம்ப முடியாதவை. நீங்கள் கடந்த 6 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்கு முந்தைய ஆட்சி மீது பழி போடுவீர்கள்? இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!