‘நோ சூடு நோ சொரணை’ நித்யானந்தா படத்துடன் திருமண வாழ்த்து பேனர் வைத்த வாலிபர்கள்

திருச்சி அருகே திருமண நிகழ்ச்சியில் நித்தியானந்தா புகைப்படத்தை அச்சிட்டு டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் மீது 2 இளம்பெண்களை கடத்தியதாகவும், குஜராத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும் நித்தியானந்தாவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் தீவு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வரும் நிலையில், நித்தியானந்தா இணைய தளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையே நித்தியானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், ஒரு திருமண நிகழ்ச்சியில் நித்தியானந்தா புகைப்படத்தை அச்சிட்டு டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே உள்ள பல்லவபுரம் கிராமத்தை சேர்ந்த மணமக்களுக்கு லால்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

மணமக்களை வாழ்த்தியும், திருமண விழாவிற்கு வரும் பொதுமக்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்களை வரவேற்றும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சார்பில் நண்பர்கள், உறவினர்கள் பேனர்கள் வைத்திருந்தனர்.

அதில் மணமகனின் நண்பர்கள் வைத்திருந்த பேனரில் நித்தியானந்தாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. திருமணத்துக்கு வந்த பலரும் அந்த பேனர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.

நித்தியானந்தா புகைப்படத்துடன் டிஜிட்டல் பேனர் வைத்தது குறித்து மணமகனின் நண்பர்கள் கூறுகையில், திருமணத்திற்கு வரும் பொதுமக்களை கவரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக தற்போது இணைய தளங்களில் யார் அதிக டிரெண்டில் உள்ளனர் என்று பார்த்த போது அதில் நித்தியானந்தா இருப்பது தெரியவந்தது.

பேஸ்புக், வலை தளங்களில் எதை எடுத்துக்கொண்டாலும் நித்தியானந்தாவின் வீடியோதான் வந்து கொண்டு இருக்கிறது. அவருடைய போட்டோவை வைத்து பேனர் அச்சடித்தால் பொதுமக்களை வெகுவாக கவர முடியும் என்று நினைத்தோம். இதற்காகவே பேனரில் நித்தியானந்தா போட்டோவை அச்சடித்தோம். நித்தியானந்தா வித்தியாசமாக இருப்பதால் எங்களுக்கு பிடித்துள்ளது.

குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்தவர் நித்தியானந்தா. அவர் கைலாசத்தில் இருக்கிறார் என்கிறார். அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் நாங்களும் செல்வோம். அப்படி ஒரு நாடு இருக்கும் என்றால் அதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பேனர் அடித்தோம்.

நித்தியானந்தா எதைப் பற்றியுமே கவலைப்படுவது கிடையாது. யார் எது சொன்னாலும் அவர் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ? அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். இதனால் அவருடைய கொள்கை எங்களுக்கு ரொம்ப பிடித்துள்ளது. மேலும் நித்யானந்தா எப்போதுமே குதூகலமாக, ஜாலியாக இருக்கிறார். இது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துள்ளது.

‘நோ சூடு நோ சொரணை’ என்று நித்தியானந்தா அடிக்கடி கூறுவார். அது எங்களுக்கு பிடித்துள்ளது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அனைவருமே அந்த வசனத்தை போட்டு தான் பேசுகிறார்கள். அதனால் தான் பேனரில் அந்த வாசகத்தை அடித்தோம். அதேபோன்று தான் எங்களை யார் என்ன சொன்னாலும், நாங்கள் கவலைப்படுவதில்லை.

எங்களுக்கு என்ன மனதில் தோன்றுகிறதோ? அதனை நித்தியானந்தா போன்று நாங்களும் செய்து கொண்டு இருக்கிறோம். அவரைப் போல் குறுகிய காலத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம் என்றனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள நித்தியானந்தாவை போலீசார் தேடி வரும் நிலையில் அவரது புகைப்படத்தை அச்சடித்து இளைஞர்கள் டிஜிட்டல் பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!