ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள்!

பாகிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைப் பதம் பார்த்த பாலைவன வெட்டுக் கிளிகள் தற்போது உகாண்டாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. லட்சக்கணக்கில் கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக் கிளிகள் மேய்ச்சல் நிலங்களையும், பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் அவசர நிலையை அறிவித்துள்ளன. இந்நிலையில் உகாண்டாவில் முகாமிட்டுள்ள லோகஸ்ட் வகை வெட்டுக்கிளிகள் கால்நடைகள் மற்றும் பயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அளித்துள்ள தகவலின்படி ஒரு வெட்டுக்கிளி கூட்டம் சுமார் 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. உகாண்டாவின் முக்கிய ஏற்றுமதியான காபிச் செடிகளை வெட்டுக்கிளிகள் கபளீகரம் செய்வதால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை அழிக்க ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கப்படுவதாகவும் உகாண்டா அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!