கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 218 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைமண்ட் பிரின் சஸ் என்ற சொகுசு கப்பல் ஹாங்காங்கில் இருந்து கடந்த 3-ந்தேதி ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்துக்கு வந்தது.

அதில் இருந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கப்பலில் இருந்த 3,711 பயணிகள் மற்றும் ஊழியர்கள் கப்பலில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டது.

கப்பலை கடலிலேயே நிறுத்தி பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் வரை 174 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சொகுசு கப்பலில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து ஜப்பான் சுகாதாரதுறை மந்திரி காட்சூநோபு காதே கூறியதாவது:-

சொகுசு கப்பலில் மேலும் 221 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதில் 43 பேர் பயணிகள், ஒருவர் கப்பல் ஊழியர். அவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்களில் முதலில் முதியவர்களை கப்பலில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பணி நாளை அல்லது அதன் பிறகு தொடங்கப்படும்.

கப்பலில் இருந்து கீழே இறக்கப்படுபவர்கள் அரசு அளிக்கும் உறைவிடத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜப்பான் சொகுசு கப்பலில் 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் 6 பேர் தமிழர்கள். அவர்கள் கப்பலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!