5,000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த சேலம் பெண்.

சேலத்தில், 5,000த்துக்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்துள்ள பெண்ணை, மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சேலம், அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர், சீதா, 32; திருமணமாகாதவர். தந்தை மாயமாகி, தாயாரும் இறந்து விட்டதால், பாட்டி ராஜம்மாளுடன் வசித்து வருகிறார்.இவருக்கு சொந்தமாக வீடு இருந்த போதிலும், 24 மணி நேரமும், சேலம், பெரமனுாரில் உள்ள டி.வி.எஸ்., சுடுகாடே கதி என இருக்கிறார். அங்கு வரும் பிணங்களை அடக்கம் செய்து, வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.தன், 12 வயதில் இந்த தொழிலுக்கு வந்த சீதா, இதுவரை, 5,000த்துக்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை, எந்த பிரதி உபகாரமும் பெறாமல் அடக்கம் செய்துள்ளார்.

அது மட்டுமின்றி, உறவினர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட, 3,000த்துக்கும் மேற்பட்ட பிணங்களையும் அடக்கம் செய்துள்ளார்.பிணங்களை அடக்கம் செய்வதற்காக, உறவினர்கள் கொடுக்கும் தொகையை மட்டும் பெற்றுக் கொள்கிறார். நள்ளிரவு, 12:00 மணிக்கு அழைத்தாலும், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், சுடுகாட்டில் ஆஜராகி, பிணத்தை அடக்கம் செய்கிறார். ‘பிணங்களை அடக்கம் செய்வது கடவுளுக்கு செய்யும் சேவை’ எனக் கூறும் இவரை, அப்பகுதி மக்கள், ‘கல்லறை தோட்டத்தின் கன்னியாஸ்திரி’ என பாராட்டுகின்றனர்.

சீதா கூறியதாவது:எனக்கு எல்லமே பாட்டி ராஜம்மாள் தான். என் தந்தை, எனக்கு, 11 வயது இருக்கும் போது, என் தாயின் உடலில் தீ வைத்து மாயமாகி விட்டார். தாயை ஒரு மாதம், மருத்துவமனையிலும், வீட்டிலும் பார்த்தேன். அவர் இறந்த நிலையில் அடக்கம் செய்ய முடியாமலும், அவருக்கு ஒரு பிடி மண்ணை கூட என்னால் போட முடியாததும், பெரும் ஏமாற்றத்தை தந்தது. என்னை போல், உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை யாருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே, இத்தொழிலுக்கு வந்து விட்டேன்.

தாய்க்கு, என் தந்தை செய்த கொடுமை தான், திருமணத்தை நான் வெறுக்க காரணமாக அமைந்து விட்டது. பிணங்களை அடக்கம் செய்யும் போது, என் மனம் பதறுவது இல்லை. ஆனால், திருமணம் செய்து, ஒரு மாதத்துக்குள் வரும் பெண்களின் உடல்களை பார்க்கும் போது, மனம் பதைக்கிறது. நான் வேண்டுவது எல்லாம், ‘பெண்களை மதியுங்கள்; மிதித்து விடாதீர்கள்’ என்பது தான். இவ்வாறு, அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!