கோத்தாவை பேரினவாதிகள் இயக்குகின்றனர் – வேலு

நாட்டின் ஜனாதிபதியை ஒரு சில பேரினவாதிகளே இயக்குகின்றனர் என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அவர் தெரிவித்தார்.

மேலும், சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்ச தரப்பு உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. சாய்ந்தமருது மக்களும் மகிழ்ச்சி வெளியிட்டனர். ஆனால் வலது கையில் கொடுத்துவிட்டு இடது கையால் பறித்தெடுப்பதுபோல் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அரசாங்கம் பல கதைகளை கூறினாலும் அவை அனைத்தும் அம்புலிமாமா கதைகள்போலவே உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த அரச நிர்வாகி எனவும் சிந்தித்து மிகவும் நிதானமாகவே முடிவுகளை எடுப்பார் என்று கூறப்பட்டநிலையில் சாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் நடந்தது என்ன? ஒரு சில பேரினவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்களை திருப்திபடுத்துவதற்காகவே வர்த்தமானி அறிவித்தல் இரத்துசெய்யப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

எனவே, நாட்டின் ஜனாதிபதியை ஒரு சில பேரினவாதிகளே இயக்குகின்றனர். அவர்களின் கட்டளைகளின் படியே அவர் செயற்படுகின்றார் என்ற சந்தேகம் எமக்குள் ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாது, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக, தைரியமாக முடிவெடுக்கும் நிலையில் தான் இல்லை என்பதையும் ஜனாதிபதி தற்போது ஏறத்தாழ உறுதிப்படுத்திவிட்டார். இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு உரிமை அரசியலை வழங்கமாட்டோம் என்பதை ராஜபக்ஷக்கள் பலதடவைகள் உறுதிப்படுத்திவிட்டனர்.

எனினும், அவர்களின் பின்னால் ஓடி சலுகைகளுக்காக தமிழ்பேசும் மக்களின் வாக்குகளை விலைபேசும் தரகர்கள் இருக்கவே செய்கின்றனர். எனவே, பொதுத் தேர்தலில் சிந்தித்து தமது வாக்குரிமையை பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். அவர்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலிக்கும் – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!