1000 ரூபா குறித்து இன்னும் இறுதி முடிவு இல்லை – அமைச்சர் கைவிரிப்பு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதாக தைப்பொங்கல் தினத்தன்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இன்னமும் அரசாங்கத்துக்கும் கம்பனிகளுக்குமிடையில் இது குறித்த இணக்கப்பாடு எட்டப்படவில்லையென பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்கப்படுமென கடந்த தைப்பொங்கல் தினத்தன்று அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் அரசாங்கத்துக்கும், கம்பனிகளுக்கும், தொழிற்சங்களுக்குமிடையில் தொடர்ச்சியாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதுடன் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

பேச்சுவார்த்தைகள் எவ்வாறு நடைபெறுகிறதென்றும் கம்பனிகளின் கோரிக்கையாக முன்வைக்கும் விடயங்கள் பற்றியும் அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் வினவிய போது, தொடர்ச்சியாக கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க மேலும் தற்போதைய சூழலிலிருந்து 300 ரூபா அதிகரிக்கப்பட வேண்டும். அந்நிதியை அதிகரிப்பது குறித்தே பேசப்படுகிறது.

கம்பனிகள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளும் சலுகைகளும் முன்வைக்கப்படுகின்றன. என்றாலும் இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை. மார்ச் முதல் வாரம் அல்லது மார்ச் மாதம் கட்டாயம் 1,000 ரூபா சம்பள உயர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 1,000 ரூபாவை வழங்குவதில் சிக்கல் நிலைமையே தொடர்கிறது. இதுதொடர்பில் நாம் தெரியப்படுத்துவோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!