கொரோனா தாக்குதல்: சொகுசு கப்பலில் மேலும் ஒருவர் பலி!

ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால், அந்த கப்பலில் இருந்த செய்த பயணிகள் ஜப்பானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு படிப்படியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமான பயணிகள் தீவிர பரிசோதனைகளுக்கு பின்னர் வைரஸ் பரவவில்லை என உறுதியான பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 2 பயணிகள் சிகிச்சை பலனின்றி கடந்த 20-ம் தேதி உயிரிழந்தனர். இந்நிலையில், கொரோனா தாக்கிய மேலும் ஒரு பயணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக 57 பயணிகளுக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கப்பலில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவல்களின் மூலம் ஜப்பான் நாட்டில் கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!