ஆடிக்கொண்டே ஆபரேசன் செய்த டாக்டர் – 100 பெண்கள் பாதிக்கப்பட்டதாக புகார்

அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடி கவனக்குறைவாக ஆபரேசன் செய்ததால், பாதிக்கப்பட்டதாக சுமார் 100 பெண்கள் புகார் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் விண்டெல் பூட்டே. தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணரான இவர் தனது மருத்துவமனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, இடையிடையே மியூசிக் போட்டு ஆடிப்பாடி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இவ்வாறு ஆடிப் பாடும்போது எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றமும் செய்துள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்காக நோயாளி மயக்க நிலையில் படுத்திருக்க, அருகில் டாக்டர் வெண்டெல் நடனமாடுகிறார். அவரது உதவியாளர்களும் சேர்ந்து ஆடுகின்றனர்.

அவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நோயாளிகள் பலர் இந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு டாக்டரின் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என சுமார் 100 பேர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் டாக்டர் விண்டெலுக்கு எதிராக சில பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். டாக்டர் விண்டெலிடம் சிகிச்சை பெற்ற பிறகு நோய்த்தாக்கம், தொற்றுநோய்கள் மற்றும் மூளை பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆனால் டாக்டரோ, அவரது மருத்துவமனை தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!