கோட்டாவுடன் இணையும் சந்திரிக்கா? அரசியலில் புதிய திருப்பம். சஜித்தை வீழ்த்த சகுனியின் ஆட்டமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நெருக்கமான உறவினை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து களமிறங்கவுள்ளன. மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருக்கமாக இருந்த சந்திரிகா, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரிகாவின் தந்தையால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பெரும் நெருக்கடியில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது அழிவை நோக்கிச் செல்வதாக சந்திரிகாவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்திரிகா குமாரதுங்க மீண்டும் ஒரு முறை அரசியல் மாற்றத்திற்கு தயாராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஸ்ரீலங்காவின் 72ஆவது சுதந்திர தினத்தில் கலந்து கொண்டிருந்த சந்திரிகா, பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நட்புறவாக கலந்துரையாடியிருந்தமையை சுட்டிக்காட்டியிருந்த தென்னிலங்கை ஊடகங்கள், அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம் அங்கிருந்தே உருவாக்கப்பட்டுவிட்டதாக எடுத்துரைத்திருந்தன.

இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்துடன் நெருக்கமான உறவினை சந்திரிகா ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ள பிரபல நபருக்கு சந்திரிக்கா ஆதரவு வழங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

சந்திரிக்காவின் ஆலோசனைக்கு அமைய குறித்த நபர், அந்தப் பகுதியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!