தேர்தலுக்காக சிங்கள மக்களிடம் இனவாத்தை தூண்டிவிடும் முன்னால் ஜனாதிபதி.

“ஊழல், மோசடிகளினால் நாட்டை நாசமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் சிங்கள மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.” என அறைகூவல் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

அவர் மேலும் கூறுகையில்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் ஓரணியில் நின்று கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தபடியால் அவர் அமோக வெற்றியடைந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் படுதோல்வியடைந்தார்.

ஐ.தே.க. தலைமையிலான கூட்டணியின் படுதோல்விக்கும் அந்தக் கூட்டணி இன்று பிளவடைந்து காணப்படுகின்றமைக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே முழுப் பொறுப்பு.

ஒரு புறத்தில் பதவி ஆசையில் பிரதமர் கதிரையில் அமர்ந்திருந்த ரணில், மறுபுறத்தில் ஊழல், மோசடிகளுக்குத் தலைமை தாங்கினார்.

நல்லாட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி தலைமையில் அமைகின்ற அரசு தக்க தண்டனையை வழங்கியே தீரும்.

எனவே, பொதுத் தேர்தலில் சிங்கள மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள மூவின மக்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி வெற்றியடையும் வகையில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!