படை வசமுள்ள காணிகள் விடுவிப்பு குறித்து ஜனாதிபதியுடன் பேசவுள்ளராம் ரணில்!

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு, கிழக்கில் முப்படையினர் கட்டுப்பாட்டின் கீழுள்ள விடுவிக்கப்படக் கூடியதென அடையாளம் காணப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்குரிய காணிகள் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் காணியை ஒன்பது வருடங்களாக இராணுவத்தின் 64 ஆவது பிரிவின் தலைமையகம் பயன்படுத்தி வருகின்றது. இதனால் முத்தையன்கட்டுக்குரிய நீர்ப்பாசன பொறியியலாளர் திணைக்களத்தை அவ்விடத்தில் அமைக்க முடியாதுள்ளது. அலுவலகம் அமைக்கப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் காரியாலயத்தை அமைக்க காணி வழங்கப்படவில்லை.

எனவே, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள இராணுவத்தால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இவ்வாறான காணிகளை, அந்தந்த நிறுவனங்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? அந்நடவடிக்கை எக்காலப்பகுதிக்குள் நிறைவு பெறும்? என்று சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பி. பிரதமரிடத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மேலும் கூறுகையில், ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 64ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள காணியானது இராணுவத்தினரால் துப்பரவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கேந்திர முக்கிய பகுதியாக விளங்குவதால் அந்தப் பகுதியை தற்போது மீள கைவிட முடியாது என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

படைப்பிரிவின் தலைமையகம் அமைப்பதற்கு முன்னர் அவ்விடத்தில் நீர்பாசன காரியாலயமொன்று இருந்திருந்தாலும், அது திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அரச காணியாகவே அது பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்றுக்காணியொன்றில் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தை அமைப்பது குறித்து பரீசிலிப்பதே சிறப்பு. அதற்கான நிதி ஒதுக்கப்படும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் பாவனைக்குட்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பதற்கு ஏற்றவகையிலான பாதுகாப்பு படையினருக்கு தேவையற்றதென கருதப்படும் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு சென்றிருந்த போது இது பற்றி படையினரிடம் பேசினேன். கொழும்பு வந்த பிறகு இராணுவத் தளபதியுடனும் கலந்துரையாடினேன். ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளேன். விரைவில் முல்லைத்தீவுக்கு வருவதற்கும் எதிர்பார்க்கின்றேன்.

விடுவிப்பதற்கு என அடையாளம் காணப்பட்ட தனியார் காணிகளை இவ்வருடம் முடிவதற்குள் மீளக்கையளிப்பதற்கு திட்டம் வகுத்துள்ளோம். இதற்கு நிகரான வகையில் அரச காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையும் இடம்பெற்றுவருகின்றது. எதிர்வரும் இரண்டு வருடகாலப் பகுதியில் இந்நடவடிக்கையை நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!