முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் – மாவை

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன், கேவிந்தன் கருணாகரம் மற்றும் ஆர்.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்கு ரீதியாக ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து ஆராயப்பட்டதோடு, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படுவது தொடர்பிலான சத்தியக்கூறுகள் தென்படுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அச்சமயத்தில் வடமாகாண சபைக்கு கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன. குறிப்பாக மாவை.சோ.சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது பொருத்தமானது என கூட்டமைப்பிற்குள்ளும் வெளியிலும் கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்ற நிலையில் அவருடைய நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பில் வினவப்பட்டிருந்தது.

அதன்போது கருத்து வெளியிட்டிருந்த மாவை.சோ.சோனாதிரா,

வடக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை போட்டியிடுமாறு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். இருப்பினும் சிலபல காரணங்களுக்காக அந்த தீர்மானத்தினை நடத்த முடியாது போயிருந்தது.

குறிப்பாக நான் போராட்ட பாதையிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்தமையால் அக்காலத்தில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த மகிந்த ராஜபக்ஷ அதனைப் பயன்படுத்தி அரசியல் இலபம் ஈட்டிவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்தோம். அதன் காரணத்தால் நாம் வேறொரு தெரிவுக்குச் சென்றிருந்தோம்.

இருப்பினும் பகுதியளவில் முதலமைச்சர் பதவியினை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டபோதும் அதற்கு நான் இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. ஆவ்வாறான நிலையில் இம்முறை முதலமைச்சர் வேட்பாளராக எனது பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி செய்து முன்மொழியுமாகவிருந்தால் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் களத்தில் குதிப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை கூட்டி முதலமைச்சர் வேட்பாளர் உட்பட மாகாண சபை தேர்தலை முகங்கொடுத்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துவது என்ற தீர்மானத்துடன் அக்கூட்டம் நிறைவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!