நைஜீரியாவில் “லாசா” காய்ச்சலுக்கு 100 பேர் உயிரிழப்பு!

உலகில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நைஜீரியாவை ‘லாசா’ காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. லாசா காய்ச்சல் என்பது லாசா வைரசால் ஏற்படும் ஒரு கடுமையான ரத்தக்கசிவு நோயாகும். கடந்த 2012-ம் ஆண்டில் இந்த காய்ச்சலுக்கு 112 பேர் பலியாகினர். இந்தநிலையில் அங்கு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் லாசா காய்ச்சல் தாக்கி பலியாகி உள்ளனர் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காய்ச்சலுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை அரசு தொடங்கி இருப்பதாக கூறிய அவர், எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து தங்கள் வீடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டார். அவற்றின் மூலமாகவே இந்த நோய் பரவுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பிரசாரம் மூலம் நாட்டில் சுகாதாரம் மோசமாக இருக்கும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் சுற்றுச்சூழல் சுத்தமாக இருப்பதை அமைச்சகம் உறுதி செய்யும் என்றும், இதுவே நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி எனவும் அபுபக்கர் கூறினார். 1969-ம் ஆண்டு நைஜீரியாவின் லாசா நகரில் இந்த வைரஸ் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டதால் அதற்கு ‘‘லாசா காய்ச்சல்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!