நிர்பயா பாலியல் வழக்கு: மூன்றாவது முறையாக தள்ளிப்போன தூக்கு!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர். மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் 4 பேரும் ஒவ்வொருவராக கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததால், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு வழக்கு வருகிற 5-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி (இன்று) காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு கடந்த மாதம் 17-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று காலை 10.30 மணிக்கு மூடிய அறைக்குள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், பின்னர் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து பவன் குப்தா தரப்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு கருணை அனுப்பப்பட்டது. அவரது சார்பில் வக்கீல் ஏ.பி.சிங் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி பவன் குப்தா, அக்‌ஷய் குமார் ஆகியோர் சார்பில் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி தர்மேந்தர் ராணா தலைமையிலான அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தர்மேந்தர் ராணா கூறினார். உடனே குற்றவாளிகள் தரப்பு வக்கீல் ஏ.பி.சிங், பவன் குப்தாவின் மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து இருப்பதால் அவரது சார்பில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அத்துடன், சிறை விதிமுறைகளின்படி கருணை மனு மீதான முடிவு நிலுவையில் இருக்கும் போது குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது என்றும் அவர் வாதிட்டார்.

இந்த நிலையில், பவன் குப்தாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததாக தகவல் வெளியானது. அதன்பிறகு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு பின்னர் பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் தரப்பில் ஜனாதிபதியிடம் மீண்டும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தும் முயற்சியில் குற்றவாளிகள் ஈடுபட்டு இருப்பதாகவும், அக்‌ஷய் குமார் மீண்டும் கருணை மனு தாக்கல் செய்து இருப்பது பற்றி தகவல் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி தர்மேந்தர் ராணா குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீலிடம், “நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறினார். பின்னர், குற்றவாளியின் கருணை மனு நிலுவையில் இருப்பதால், தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும், எனவே 4 குற்றவாளிகளையும் 3-ந்தேதி (இன்று) காலை 6 மணிக்கு தூக்கில் போடுவதை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தள்ளிவைத்து உத்தரவிடுவதாகவும் கூறினார். எனவே குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்படமாட்டார்கள். அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவது 3-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!