தடுப்பு முகாம் அகதிகளுக்காக ஜெனிவாவின் கதவைத் தட்டும் ஈழத்தமிழ் மாணவி!

அவுஸ்ரேலியாவில் நீண்டகாலம் தடுப்புமுகாமில் உள்ள இரு தமிழ் அகதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் நோக்குடன், 12ம் தரத்தில் கற்கும் உயர்தர கல்லூரி மாணவியான றேணுகா இன்பகுமார் என்ற ஈழத்தமிழ் மாணவி ஜெனிவா சென்றுள்ளார்.

பத்து ஆண்டுகளாக அவுஸ்ரேலிய தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த தமிழ் அகதிகள் இருவரும், மனிதாபிமானமற்ற முறையில் கொடுமையான வாழ்வுக்குள் சிக்குப்பட்டுள்ளதை, சர்வதேச சமூகங்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக, அவரது பயணம் அமைந்துள்ளது.

மெல்பேனில் உள்ள மைற்றா தடுப்புமுகாமில் உள்ள இருவரையும், கடந்த சில வருடங்களாக சந்தித்துவந்த அவர், அவர்களது காலவரையற்ற தடுப்புமுகாம் வாழ்வை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.

தனது பாடசாலையில் உள்ள சகமாணவிகளுக்கு குறித்த இருவரின் விடுதலைக்கான அவசியத்தை விபரித்ததன் மூலம் அவர்களுக்கு ஊடாக குடிவரவுத்துறை அமைச்சருக்கு பல வேண்டுகோள்கள் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அவ்வேண்டுகோள்களை அமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது ஜெனிவா சென்றடைந்துள்ள அவர், சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான விடயங்களை கண்காணிக்கும் விசேட அதிகாரி நில்ஸ் மெல்சர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கான துணை ஆணையர் ஜிலியன் றிக்ஸ் மற்றும் முக்கிய ஐ.நா அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இன்று ஐ.நா மனித உரிமை சபையின் அமர்விலும் கலந்து கொண்டு, குறித்த அகதிகளின் விடுதலை தொடர்பாக உரையாற்றவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!