இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் ரவி கருணாநாயக்க?

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பெரும்பாலும் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள், அவர் அங்கு இல்லாத நிலையில் வெறும் கையுடன் திரும்பினர்.

ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பல காவல்துறை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று அல்லது இந்தவாரம் வேலை நாள் ஒன்றில் அவர் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரவி கருணாநாயக்கவை அரசாங்கத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவரே தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார் என்று ஜேவிபி குற்றம்சாட்டியிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டை, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!