தென் ஆப்பிரிக்காவில் சோகம்: சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் இன்று அதிவேகமாக சென்ற மினி பேருந்தும், மற்றொரு இலகு ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. எல்டோரடோ பார்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. இரண்டு வாகனங்களிலும் பயணித்த பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் சிலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் பலத்த காயமங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!